(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  இடம்பெறும் விசாரணைகளில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சி.ஐ.டி.யினரால் விடுவிக்கப்பட்டமையானது நியாயமற்றது என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா அறிவித்துள்ளார். 

ரியாஜ் பதியுதீன் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை அதிகாரி உள்ளிட்ட சி.ஐ.டி. உயர் அதிகாரிகளை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழைத்து, விசாரணை கோவைகளை பரிசீலித்த போது அவர் விடுவிக்கப்பட்டமை நியாயமற்றது என தெளிவானதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷரா ஜயரத்ன தெரிவித்தார்.

இன்றைய தினம் சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, சி.ஐ.டி. பணிப்பளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ்,  பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார ஆகியோர் சட்ட மா அதிபரை, அவரது ஆலோசனைக்கு அமைய சந்தித்தனர். 

இதன்போது ரியாஜ் பதியுதீன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை கோவையை பரிசீலித்த சட்ட மா அதிபர், அது சம்பூரணமற்றது என  தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யயும் சி.ஐ.டி. பிரதனைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சினமன் கிராண்ட் கோட்டனில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை  தாரி இன்சப் அஹமட்டுக்கும் ரியாஜ் பதியுதீனுக்குமிடையே இருந்த 7 அழைப்புக்களை மையப்படுத்தியே அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.