( எம்.எப்.எம்.பஸீர்)  

முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க, பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அது தொடர்பில் எதிர்வரும்  நவம்பர் மாதம் 18 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவ்விருவருக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.  

கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி ஆதித்த பட்டபெதி இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். 

குற்றப் பகிர்வுப் பத்திரத்தை கையளிக்க இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குறித்த இருவருக்கும் எதிரான  குற்றப் பகிர்வுப் பத்திரத்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்  குழு கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி  மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தது. 

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், பேசுபொருளான மொனார்க் தொடர்மாடி சொகுசு குடியிருப்பை மையப்படுத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 19 ( உ) பிரிவின் கீழ் முதலாம், 2 ஆம் பிரதிவாதிகளாக  முறையே ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன அலோசியஸ் ஆகியோர் பெயரிடப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.