மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.

இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது.

முன்னாசிங் இந்த மாட்டை வாங்கி வந்ததற்கு பிறகு அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு அவருடைய மாட்டு பண்ணை அசுர வளர்ச்சி அடைந்தது.

இதனால் ஹீரா எருமை மாட்டை அதிர்ஷ்டகர மாடாக கருதுகின்றனர். எனவே பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.

இந்த நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டார். ரூ.4 கோடி வரை அவர் விலை பேசினார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.

இந்த மாட்டால் தான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. எனவே அதை விற்க மனம் இல்லை என்று அவர் கூறினார்.