(செ.தேன்மொழி)

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் தான்கூறிய கருத்தை ஊடகங்கள் திரிவுப்படுத்தி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் நான் கூறியதாக கூறப்படும் கருத்து திரிவுப்படுத்தப்பட்டே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே நாங்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.  உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் போது கத்தோலிக்க மக்களை போன்று பௌத்த, இந்து மக்களும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று நான் தனிப்பட்டவகையில் அறிந்திருந்த, வங்கியில் பணிபுரிந்து வந்த ஒருவரின் மனைவியும், மகளும் இந்த தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்தனர்.


இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது . அவர்கள் தொடர்பான இரகசிய தகவல்களை அறிந்திருப்பதற்கு நான் இரகசிய பொலிஸ் பிரிவில் கடமைபுரிய வில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம்.

இதேவேளை, ஏதாவது ஒரு குற்றச்செயற்பாடு தொடர்பில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அது நிரூபிக்கப்படாவிட்டால் அவரை விடுதலை செய்வதில் தவறில்லை. அதேவேளை குறித்த நபரினால் சம்பந்தப்பட்ட வழங்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நீதிமன்றம் எண்ணினால்,  அவரை பிணையின் அடிப்படையிலோ , அல்லது வேறு எந்த நிபந்தனையின் அடிப்படையிலோ விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு உரிமையுள்ளது. அதனைதான் நான் கூறினேன் என்றார்.