சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார்.

ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் அடுத்ததாக பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிம்பு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். 

இவர் ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘பூமி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்கிறார். பாலாஜி கேசவன் வசனம் எழுதும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுசீந்திரன்.

இந்த படத்தின் படபிடிப்பு தற்போது தமிழக நகரான திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒரேகட்டமாக முழு படபிடிப்பையும் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே நடிகர் சிம்பு இந்த கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.