மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள இரு கிராமங்களையும் இன்று மாலை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி மாவட்ட பொது வைத்தியசாலையில் சீ.பி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 9 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபருடன் ஒன்றாக இருந்து முதலாவது நபர் என அடையாளம் காணப்பட்ட 41 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவர்களில் 8 பேரூக்கு இது வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த 8 பேரூக்கும் மீண்டும் சீ.பி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

இதனை விட இவர்களுடன் தொடர்பு பட்ட இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என கூறப்படுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் முதல் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 103 பேரூம், இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரூம் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண பகுதியிலே தங்கி உள்ளனர்.

ஒருவர் மன்னார் நகரில் வரையறுக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கி இருந்தார்.இவர்களில் 5 பேர் நேற்று இரவு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரையும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டித்தோட்டம் பகுதியிலும் மேலும் ஒருவர் மன்னார் நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்தார்.

அவர்களுடன் தொடர்பு பட்டவர்களை கண்டு பிடிப்பதற்காக பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரியகடை போன்ற பகுதிகளை தற்காலிகமாக மூடியுள்ளோம்.

முழுமையான நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை குறித்த பகுதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மன்னார் பெரியகடை மற்றும் பட்டிதோட்டம் ஆகிய இரு கிராமங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

குறித்த கிராமத்தில் இருந்து வெளியில் செல்லவும்,குறித்த கிராமத்திற்கு உள்ளே செல்லவம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் பெரிய கடை கிராமம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதிகளில் உள்ள மன்னார் மீன் சந்தை, மரக்கறி வியாபார சந்தை மற்றும் பல்வேறு வர்த்தக நிலைங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.