ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது.  

இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜோவாகிம் ஹெர்மான் அளித்த பேட்டியின் போது, ‘‘பயணிகள் புகையிரதத்தில் தாக்குதல் நடத்திய இளைஞன் ஓச்சன்பியூர்ட் நகரில் வசித்து வந்திருக்கிறார். அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு உரிய பொருட்களோடு கையால் வரையப்பட்ட ஐ.எஸ். இயக்கக் கொடியும் இருப்பது தெரியவந்துள்ளது’’ என கூறினார்.

இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். 3 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதற்கிடையே பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர், தங்களது இயக்கத்தைச் சேர்ந்த வீரர் என்று ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.

வீடியோ வெளியீடு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள வீடியோவில், “ஆப்கான் அகதி முகமது ரியாத் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஜேர்மனியில் தாக்குதலை நான் முன்னெடுக்கின்றேன் என்று பேசும் காட்சிகள்,” இடம்பெற்றுள்ளது.