நாட்டில்  கொரோனா விவகாரம் உச்சம் பெறும் முன்னர் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும் அதனை நிறைவேற்றுவது மற்றும் அதன் சாதக, பாதக தன்மைகள் தொடர்பிலுமே நாளாந்தம் அதிகம் பேசப்பட்டது. 

இறுதியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந் நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39  விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு  மனுக்கள் மீதான பரிசீலனைகளைத்  தொடர்ந்து குறித்த திருத்தம் தொடர்பில் தனது வியாக்கியானங்களை உயர் நீதிமன்றம் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் 4 உத்தேச சரத்துக்கள் நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பின் மூன்றாம், நான்காம் உறுப்புரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்ற அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரிமைக்கமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் என்று உயர்நீதிமன்றம் தனது பரபரப்பான தீர்ப்பை அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி அனைத்து தரப்புகளின்  வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஆறாம் திகதி பிற்பகல் 3 மணியுடன் அனைத்து எழுத்து மூல சமர்ப்பணமும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே அது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அலுவிகார, சிசிர டி ஆஃப்ரு மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் இதனை 4 நாட்கள் பரிசீலித்தனர்.

இந்தத் தீர்ப்புக்கு மாற்றமான நிலைப்பாட்டினை நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன கொண்டிருந்த போதிலும் நீதியரசர் குழாமின் பெரும்பான்மை நிலைப்பாட்டின் பிரகாரம் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய உத்தேச 20 ஆம் திருத்தச்சட்டத்தின் மூன்றாம் ஐந்தாம் பதினான்காம் மற்றும் 22 ஆம் அத்தியாயங்களை அப்படியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்பதாகும்.

எனவே, தீர்ப்பின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பின்றி 20 ஆவது திருத்தம் தற்பொழுது உள்ளவாறே நடைமுறைக்கு கொண்டுவர முடியாத நிலைமைகளே ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, 20 ஆவது திருத்தம் பாராளுமன்றகுழு விவாதங்களை தொடர்ந்து திருத்தம் செய்யப்படும் என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்டம் என்ன என்பதை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்