மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 27 ஆவது போட்டி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பானது.

இது ரோகித் சர்மா மும்பை அணிக்காக விளையாடும் 150 ஆவது போட்டியாகும்.

அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, முதலாவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சிலேயே டெல்லியின் முதல் விக்கெட் கவிழ்ந்தது. 

அதன்படி பிரித்வி ஷா 4 ஓட்டத்துடன் ட்ரெண்ட் போல்டின் பந்து வீச்சில் குருனல் பாண்டியாவிடம் பிடிகொடுத்து நடையை கட்ட, தொடர்ந்து வந்த ரஹானேயும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனால் டெல்லி அணி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதன் பின்னர் தவான் - ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர்ந்து, மும்பையின் பந்து வீச்சுக்களை அனைத்து திசையிலும் அடித்தாடினர். அதனால் டெல்லி அணி 10 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களையும், 14 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களையும் பெற்றது.

15 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் ஸ்ரேயஸ் அய்யர் 42 ஓட்டங்களுடன் குருனல் பாண்டியாவின் பந்து வீச்சில் போல்ட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னஸுடன் கைகோர்த்த தவான் 15.2 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

16.3 ஆவது ஓவரில் ஸ்டோய்னஸ் 13 ஓட்டங்களுடன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரி ஆடுகளம் நுழைந்தார்.

இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் தவான் மொத்தமாக 52 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 69 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் குருனல் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.