இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் ஒருதொகை மஞ்சளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னாரின் கரையோரப் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே இவ்வாறு கேரள கஞ்சா மற்றும் ஒருதொகை மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.

சோதனை நடவடிக்கைகளின் போது மன்னார் கடற்கரைப் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர்கள் கஞ்சா பொதிகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 125 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டன.  தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தலைமன்னார் பகுதியிலுள்ள வீடொன்றில் சூட்சுமமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 154 கிலோ 500 கிராம் மஞ்சள் மற்றும் 2250 மில்லிகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிhர் முன்னெடுத்து வருகின்றனர்.