கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகக் கூறி களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் ஐ.பி.எல். அமைப்பிடம் முறையிட்டுள்ளனர்.

இந்தப் முறைப்பாட்டின் படி தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசவதற்கு தடை விதிக்கப்படவில்லை.

ஒருவேளை மீண்டும் நடுவர்கள் முறைப்பாடளிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

சுனில் நரேன் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியன்லீக் இருபதுக்கு - 20 போட்டியில் நரேன் பந்துவீ்ச்சில் சந்தேகம் எழுந்ததால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் நரேன் பந்துவீச்சு மீது முறைப்பாடு அளிக்கப்பட்டடது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் நரேன் பந்துவீச்சு மீது நடுவர்கள் முறைப்பாடளித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச நரேனுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் தனது பந்துவீச்சில் மாற்றம் செய்து, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.சி.சி.யின் அனுமதியை நரேன் பெற்றார். 

எனினும் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரிலும் நரேன் பங்கேற்கவில்லை. 

கடந்த 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்து நடுவர்கள் முறைப்பாடளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.