புவிசார் அரசியல் சக்திகளின் உதைபந்தாட்ட மைதானமாக இலங்கை இருக்க முடியாது என்று வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறிக் கொண்டிருந்த போது, உலகின் இரண்டு முதன்மையான சக்திகள் கொழும்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தன.

கடந்த 6ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், நடந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் விரிவான பாதுகாப்பு ” (Comprehensive Maritime Security in the Indian Ocean Region’) என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இந்த உதைபந்தாட்ட மைதான கதையைக் கூறியிருந்தார்.

“புவி அரசியல் சக்திகளுக்கு இடையிலான இத்தகைய அதிகாரப் போட்டிக்கு, நாங்கள் ஒரு விளையாட்டு மைதானமாக இருக்க முடியாது, குறைந்தபட்சம் நாங்கள் விளையாட்டில் நடுவராக இருக்க வேண்டும்.

'விளையாட்டு'க்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் இந்தக் கருத்தைக் கூறுவதற்கு முதல் நாள் கொழும்பின் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சின் செவ்வி ஒன்று வெளியாகியிருந்தது.

அந்தச் செவ்வியில் சீன- இலங்கை உறவுகள் குறித்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை சீனாவுடன் நீண்டகால உறவைக் கொண்டிருக்கின்ற போதும், நாடுகளுக்கிடையிலான கூட்டு, திறந்த, வெளிப்படையான மற்றும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையிலானதாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியிருந்தார்.

சீனாவுடனான இலங்கையின் உறவு இதுதான் என்றால், அதனை ஊக்குவிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்த அமெரிக்க தூதுவர், இலங்கை அதன் உறவுகளில் பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்கள் கவலை என்றும் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க தூதுவரின் இந்தக் கருத்து சீனாவைக் கடுமையாக கொதிப்படையச் செய்திருக்கிறது.

மறுநாளே, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அமெரிக்க தூதுவர் உள்ளூர் ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில், இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது ஆச்சரியமல்ல என்றாலும், மற்றவர்களின் இராஜதந்திர உறவுகளை கையாளும், அமெரிக்காவின் இழிவான முயற்சியைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

“சீன- இலங்கை உறவுகள் குறித்து அறிவுரை கூற அமெரிக்காவிற்கு அதிகாரமோ கடப்பாடோ கிடையாது. இத்தகைய நிர்வாண மேலாதிக்கம், அதிகாரத்துவம் மற்றும் அதிகாரத்துவ அரசியல் ஆகியன, சீனர்களால் பொறுத்துக் கொள்ளப்படாது அல்லது இலங்கையர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது.

மற்றவர்களுக்கு போதனை செய்யும், இரட்டைத் தரங்களைப் பயன்படுத்தும், போக்கில் இருந்து விடுபடுமாறு அமெரிக்காவை கடுமையாக அறிவுறுத்துகிறோம்.”’ என்றும் சீன தூதரகம் கூறியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிராக மேலும் பல கருத்துக்களையும் அந்த அறிக்கை தாங்கியிருந்தது.

அமெரிக்கத் தூதுவரின் கருத்து, இலங்கை - சீன உறவுகளை மையப்படுத்தியதாகவே இருந்தாலும், அது தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும், பகிரங்கப்படுத்தப்படாத பனிப்போரின் விளைவு என்றே குறிப்பிடலாம்.

அதுபோலவே, அமெரிக்க தூதரகத்தின் பதில் அறிக்கையும், இலங்கை விவகாரத்தைச் சுட்டுவது போன்றிருந்தாலும், அது புவிசார் அரசியலை, அமெரிக்காவுடன் நடத்திக் கொண்டிருக்கும் மறைமுக யுத்தத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள், மூன்றாவது நாடு ஒன்று பற்றி கருத்துக்களை வெளியிடுவதில்லை.

அமெரிக்கத் தூதுவர் இந்த விடயத்தில் வெளிப்படுத்திய கருத்து ஆச்சரியத்தையே கொடுத்திருந்தது.

அது இலங்கை - சீன உறவுகளின் நெருக்கத்தினால், இலங்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதாக இருந்தது. இது இரண்டு நண்பர்களில் ஒருவரை பார்த்து, மற்றவரை நம்பாதே, அவன் மோசமானவன் என்று கூறுவதற்கு சமமானது. அமெரிக்கா ஏன் இவ்வாறு வெளிப்படையாக கருத்துக்களை கூற முனைந்தது என்பதற்கான விடை இனி வரும் நாட்களில் தான் கிடைக்கும்.

ஏனென்றால், அமெரிக்க தூதுவரின் இந்தக் கருத்துக்கும், கடந்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சீன உயர்மட்டக் குழுவின் பயணத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. சீன உயர்மட்டக் குழுவின் வருகையை அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கிறது.

அதேபோன்று, அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்றும் விரைவில் கொழும்பு வரப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இவ்வாறான உயர்மட்டக் குழுக்கள் வருகின்ற அளவுக்கு இலங்கை புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

சீன உயர்மட்டக் குழு ஜனாதிபதி, பிரதமருடன் நடத்தியுள்ள

பேச்சுக்களின் முழுமையான தகவல்கள் இந்தப் பத்தி எழுதப்படும் போது வெளியாகவில்லை.

எனினும், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அதில் முக்கியமானது. இந்தப் பொருளாதார ஒத்துழைப்புகளே, இலங்கைக்கு பாதகமானதாக இருக்கிறது என்பதை அமெரிக்கத் தூதுவர் தனது செவ்வியில் கூற வந்திருக்கிறார்.

அதனால் தான் வெளிப்படைத்தன்மை, இருதரப்புக்கும் பயனளிக்கும் தன்மை போன்றவற்றை அவர் வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்க தூதுவரின் செவ்வி வெளியானதுமே, சீனத் தூதரகம் பதிலடியைக் கொடுத்திருக்கிறது.

இது சீன வெளிவிவகார அமைச்சு அண்மைக்காலமாக தத்தெடுத்துள்ள ஓநாய் வீரன் இராஜதந்திரத்தின் (Wolf worrior diplomacy) அடிப்படையிலானது.

எங்கெங்கு சீன நலன்களுக்கு, அல்லது சீனாவுக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகின்றவோ அங்கிருந்தே, உடனடியாக எதிர்வினையாற்றுவது தான், இந்த ஓநாய் வீரன் இராஜதந்திரம்.

ஏற்கனவே இவ்வாறான இராஜதந்திர போர், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வேறு பல நாடுகளில் நடந்து கெண்டிருக்கிறது. இப்போது அது இலங்கைக்கும் பரவியிருக்கிறது.

அமெரிக்க தூதுவருக்கும், சீன தூதரகத்துக்கும் இடையில் தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த பனிப்போர், இனி வரும் காலத்தில் இன்னும் விரிவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஏனென்றால், அமெரிக்காவினால் கடுமையாக எதிர்க்கப்படும், சீனாவின் BRI எனப்படும் நவீன பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கையும் ஒரு பங்காளியாக இருக்கிறது.

இலங்கையுடன் சீனா கொண்டிருக்கின்ற நெருங்கிய உறவு அமெரிக்காவை மாத்திரமன்றி, இந்தியா, ஜப்பான், போன்ற நாடுகளையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், இலங்கையில், தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு பகுதி வேலையை செய்திருப்பதாகவும் அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

ஆனாலும், இந்திய- அமெரிக்க கூட்டாளியான, ஜப்பான், கொழும்பில் இலகு ரயில் திட்டத்தை முன்னெடுக்க ஏற்கனவே கைச்சாத்திட்டிருந்த உடன்பாட்டை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய முடிவு செய்திருக்கிறது.

இந்த திட்டம் கொழும்பு நகருக்கு பொருத்தமானதல்ல என்றும், செலவு அதிகமானது என்றும் அரசாங்கம் அதற்கு நியாயம் கூறியிருந்தது.

இந்த திட்டத்துக்காக ஜப்பான் மிகமிக குறைந்த வட்டியில் கடனுதவியை வழங்கவும் இணங்கியிருந்தது.

ஆனால், அதனை உதறி விட்டுள்ள அரசாங்கம், இந்த திட்டத்தைசீனாவிடம் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தை - ஜப்பானை விட குறைந்த செலவில் முன்னெடுக்க பல சீன நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜப்பானிய தொழில்நுட்பமும், சீன தொழில்நுட்பமும் நிகரானது அல்ல என்பது சாதாரணமாக எல்லோரும் அறிந்தது தான். அதுபோலவே சீனாவின் கடனுக்கும் ஜப்பானின் கடனுக்கும் வித்தியாசம் உள்ளது.

குறைந்த செலவு என்ற அடிப்படையில், சீனாவின் கடன்பொறியையேஇலங்கை மீண்டும் விரும்புவதாக தெரிகிறது.

இவ்வாறான நிலைமை குறித்தே அமெரிக்க தூதுவர் தனது செவ்வியில் எச்சரிக்கை செய்துள்ளார். இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தூதரக அறிக்கையில் இருந்து உணர முடிகிறது.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் கொலம்பகே, இலங்கையை புவிசார் அரசியல் சக்திகள் தமது விளையாட்டுக் களமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும், அவ்வாறான ஒரு களமாக மாறுவதை இலங்கையினால் தடுக்க முடியவில்லை என்பதையே இந்த பனிப்போர் எடுத்துக் காட்டுகிறது.