என்.கண்ணன்

‘முன்னே இருந்த செவியை பின்னே வந்த கொம்பு மறைத்ததாம்’ என்றொரு பழமொழி உண்டு. அதுபோலத் தான், இலங்கையில் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எழுந்து வந்த சர்ச்சைகள், அதற்கு எதிராக உருவாகி வந்த திரட்சி என்பனவற்றை தூக்கித் தின்றிருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று.

மினுவங்கொட தொற்று மையத்தில், இரண்டாவது கொரோனா அலை

வெடித்த பின்னர், அரசியல்வாதிகளை தவிர, வேறெவரும் 20 பற்றி பேசுவதில் கரிசனை கொள்வதைக் காண முடியவில்லை. உயர்நீதிமன்றத்தில், 20ஆவது திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பற்றிய செய்திகளும் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டன.

பல நாளிதழ்களில் அந்தச் செய்தி ஒரு சிறு செய்தியாகத் தான் இடம்பெற்றிருந்தது, அந்தளவுக்கு கொரோனா திடீர் விஸ்வரூபம் எடுத்து விட்டது.

20ஆவது திருத்தம் ஜனநாயகத்தை பாதிக்கும், மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும், இருண்ட யுகத்தை தோற்றுவிக்கும், சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் என்றெல்லாம் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால், மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்று வந்தது.

அதற்கெதிரான சிறியளவிலான போராட்டங்களும் கூட தொடங்கியிருந்தனர்.

ஆனால், திடீரென அந்த பிரதான கவனிப்பு, அரங்கில் இருந்து

வெளியே கொண்டு செல்லப்பட்டது. இது தற்செயலானதா - அல்லது நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானதா என்ற கேள்விகள் உள்ளன. இவ்வாறான சூழல்கள் தோன்றும் போது அது இயற்கையானதா என்ற சந்தேகம் தோன்றுவது வழக்கம் தான்.

ஆனால் அதனைப் பற்றி யாருமே பெரிதாக கவலைப்படவில்லை. எங்கெல்லாம் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று தான் சாதாரண மக்கள், பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் கவலையாக இருந்தது.

புலமைப்பரிசில் பரீட்சை நடக்குமா, உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா என்பதிலேயே அதிகம் கரிசனை கொண்டிருந்தனர்.

ஊரடங்கோ, பொது முடக்கமோ அறிவிக்கப்பட்டால், என்ன செய்வது, என்ற குழப்பத்துக்கு விடை தேடுவது பற்றியே பலர் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைகளின் கிடைத்தவற்றை முண்டியடித்து வாங்கிக் குவிப்பதில் இன்னும் ஒரு பகுதியினர் கவனம் செலுத்தினார்கள்.

கடந்த வாரத் தொடக்கம் இவ்வாறு தான் இருந்ததே தவிர, 20 ஆவது திருத்தம் மீதான கவனமோ, கரிசனையோ பெரிதாக இருக்கவில்லை.

பெரிய கோட்டுக்கு அருகே, இன்னொரு பெரிய கோடு வரைந்து, அதனை சிறியதாக்குவது போலத் தான், 20 இன் மீதான கவனத்தை, கொரோனாவின் இரண்டாவது அலை சிறியதாக மாற்றி விட்டது.

இந்த அலை அரசாங்கத்துக்கு பாதகமானதா - சாதகமானதா என்றால்,

நிச்சயமாக சாதகமானது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால், 20 ஆவது திருத்தத்துக்கு எதிரான அலை தீவிரம் பெறத்

தொடங்கியிருந்த சூழலில் தான், கொரோனா அலை மீண்டும் தீவிரம்

பெற்றிருக்கிறது.

இதன் மூலம், 20 ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்ற முனையும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் குறைந்திருக்கின்றன.

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை மக்கள் மயப்படுத்தும், அல்லது வீதிக்கு கொண்டு வரும் முயற்சிகள் தடுக்கப்பட்டு இப்போது விட்டன.

அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கவனமும், திசை திரும்பியிருக்கிறது.

இந்த சாதக நிலை 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, நீடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், அதனை நோக்கி அரசாங்கம் முன்னகர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கிறது.

அவ்வாறாயின், கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்கத் தவறி விட்டதான பழிக்கு அரசாங்கம் ஆளாக வேண்டியிருக்குமே என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம்.

கொரோனா தொற்றின் முதலாவது அலையை, அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருந்தது. அதற்காக சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் பெற்றது.

இதற்காக அரசாங்கம் போட்ட அத்தனை கட்டுப்பாடுகளும், நெருக்கடிகயையும் மக்கள் தாங்கிக் கொண்டனர். ஆனாலும், அந்த அதிருப்திகள்- அரசியல் ரீதியான எதிர்வினையாக மக்களால் பயன்படுத்தப்படவில்லை.

அதாவது, பொதுத்தேர்தலில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

எனவே, கொரோனா சார்ந்த பிரச்சினைகளை நாட்டு மக்கள் பீதியை ஏற்படுத்தும் ஒரு விடயமாக பார்க்கிறார்களே தவிர, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றி அவர்கள் கவலை கொள்ளவோ, உற்று நோக்கவோ இல்லை என்பது அரசாங்கத்துக்கு தெரிந்து விட்டது. எனவே, இதனை பாதகமான விடயமாக அரசாங்கம் பார்க்கப்

போவதில்லை.

பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் எடுக்கப்போகும் சில அதிரடி நகர்வுகளின் வீரியத்தை தெரியாமல் மறைப்பதற்கு அல்லது அதிலிருந்து கவனத்தை சிதற வைப்பதற்கு இந்த இரண்டாவது அலை அரசாங்கத்துக்கு உதவியாகத் தான் இருக்கும். இது எந்தளவுக்கு என்றால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரையில் தான். அதாவது கொரோனா தொற்றை சில பகுதிகளுக்குள் கட்டுப்படுத்திவைத்திருக்கும் சூழல் இருந்தால் மட்டுமே, இது அரசின் பக்கம்சாதகமானதாக இருக்கும்.

அரசின் கையை மீறிச் சென்று விட்டால் நிலைமை அதோ கதி தான். மினுவங்கொட தொற்று மையத்தின் சிக்கலே இது தான். இதன் ‘மூலம்’ இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது கண்டுபிடிக்கப்பட்டால் தான், எங்கு இருந்து தொற்று வந்தது, யார் மூலம் தொற்று வந்தது என்பதை அறிய முடியும்.

ஓரிருவருக்கு தொற்று வரும் போது, அதனைக் கண்டுபிடிப்பது சுலபம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று வந்திருக்கிறது.

இவர்களில் யாருக்கு முதலில் தொற்று எற்பட்டது என்பது தெரிந்தால் தான், மூலத்தை அடையலாம். இப்போதுள்ள சூழல் வரை அது சாத்தியப்படவில்லை.

மினுவங்கொடவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளரிடம் இருந்து தான் தொற்று பரவியது என்று விசாரிக்கத் தொடங்கினால் ஒரே வட்டத்துக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு வெளியே செல்ல வேண்டும். ஒவ்வொரு தொற்றாளரையும் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும்.

அதற்கு குறுகிய கால அவகாசம் போதாது. அவ்வாறு புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்குள் கொரோனா இன்னும் பலநூறு பேரை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளது.

என்னதான், கண்டுபிடித்தாலும், உண்மையில் தொற்று எங்கிருந்து பரவியது என்ற கேள்விக்கான விடை கடைசி வரை கிடைக்காமல் இருக்கக் கூடும்.

ஏனென்றால், இது அரசாங்கம் உருவாக்கிய கொரோனா தடுப்பு கவசத்தில் ஏற்பட்ட ஒரு ஓட்டையின் விளைவாகத் தான் இருக்க வேண்டும்.

அந்த ஓட்டை அடையாளம் கண்டு அடைக்கப்படலாம். ஆனால் அம்பலத்துக்கு வருமா என்பது சந்தேகமே. ஏனென்றால் இதுபோன்ற விடயங்கள், அரசுக்கு எதிரான எதிர்வினைகளாக மாறக் கூடிய ஆபத்து உள்ளது.