நேர்காணல்:- ஆர்.ராம்

• 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது

• 20இல் உரிய திருத்தங்கள் செய்யப்படும்

இனக்குழுமங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.சுரேன் ராகவன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- வட மாகாண ஆளுநராக கடமையாற்றிய நீங்கள் தற்போது

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இதன் பின்னணி என்னவாக உள்ளது?

பதில்:- ஆளுநர் பதவியாக இருக்கலாம், தற்போது வழங்கப்பட்டுள்ள

பாராளுமன்ற உறுப்புரிமையாக இருக்கலாம் இதில் எதனையும் நானாக பின்தொடர்ந்து சென்று பெற்றிருக்கவில்லை. இந்த நாட்டில் காணப்படுகின்ற இனக்குழுமங்களுக்கு இடையிலான தீராத பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்.

அவ்வாறிருக்க, என்னிடத்தில் ஆளுநர் பதவி ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றக் கிடைத்த அந்த முதற் சந்தர்ப்பத்தினை பூரணமாக பயன்படுத்தினேன். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கண்ணீரை துடைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தேன்.

அந்தப்பணிகளின் நீட்சியாகவும் மேலதிகக் கடமைகளை

நிறைவேற்றுவதற்காகவுமே தற்போது பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

 வழங்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன். முழுமையான அர்ப்பணிப்புடன் வழங்கப்பட்ட பணிகளை முன்னெடுக்கத் தயாராகியுள்ளேன்.

கேள்வி:- நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படாது, பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்பது என்பது இயலாத காரியமல்லவா?

பதில்:- இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகவும் உள்ளது. அனைத்து இனக் குழுமங்களும் சம அந்தஸ்துடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் அவாவாகவும் உள்ளது. ஆனால் அதற்குரிய முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக

எடுக்க வேண்டியுள்ளது. அரசியல் நலன்களுக்கு அப்பால் இதற்காக உழைக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பாக சந்தேகங்கள் காணப்படுகின்றன. இது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட துருவமயப்படுத்தலின் விளைவினாலாகும். தற்போது பெரும்பான்மை மக்களின் பேராதரவு பெற்ற அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

தமிழ்ப் பேசும் இனக்குழுமங்களின் பிரதிநிதிகள் இந்த அரசாங்கத்துடன் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்த் தலைமைகள் ஜெனீவா உட்பட சர்வதேச அரங்குகளுக்குச் செல்வதை விடுத்து பௌத்த மத தலைவர்களை சந்திக்க வேண்டும். அவர்களிடத்தில் தமது நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழர்கள் தேசிய இனம் என்பதையும், பிரிக்கப்படாத இறைமையுடன் இலங்கைத் தேசத்தினை கட்டியெழுப்ப அந்த இனம் விரும்புகின்றது என்பதையும் ஆணித்தரமாகப் பெரும்பான்மை மக்களிடத்தில் கூற வேண்டும். 

அவ்விதமான செயற்பாடுகளில் நானும் முழுமையான பங்களிப்பினைச் வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன்.

கேள்வி:- புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயார் என்று தமிழ்த் தரப்புக்கள் அறிவித்தபோதும் இதுவரையில் கருத்திலெடுக்கப்படாத நிலைமை

நீடிக்கின்றதே?

பதில்:- ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவும், அதற்கு பின்னராகவும் பல தருணங்களில் தமிழ்த் தலைவர்களுக்கும், ஆட்சியில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இடையில் உத்தியோக பூர்வமற்ற வகையில் பல சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை நான் நன்கு அறிவேன். 

அவற்றை இவ்விடத்தில் பகிரங்கப்படுத்துவது நாகரீகமானதல்ல. எனினும் உத்தியோக பூர்வமாக ஒருசில சந்திப்புக்கள் நடைபெற்றிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான பணிகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இந்தப் பணிகள் அடுத்த கட்டத்திற்குச் செல்வதாயின் தமிழ்ப் பேசும் தரப்பினரதும் பங்களிப்பு நிச்சயம் அவசியமாகின்றது. ஆகவே அரசாங்கம் தமிழ் பேசும் தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நிச்சயமாக மேற்கொள்ளும் என்பது எனது திடமான நம்பிக்கையாக உள்ளது.

அதுமட்டுமன்றி, தமிழ்ப் பேசும் தரப்புக்களும், குறிப்பாக வடக்கு – கிழக்கு, மலைய தமிழ்த் தரப்புக்களும் தற்போதைய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து பயணிக்க தயாராக வேண்டும். கடந்த காலத்தினை தொடர்ந்தும் மீட்டுக்கொண்டிருப்பது காலத்தினை வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

கேள்வி:-பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்றுள்ள தற்போதைய ஆட்சியாளர்களால் அந்த மக்களின் சந்தேகங்களைப் போக்கி நிரந்தர

சமாதானமொன்றை கட்டியெழுப்ப முடியுமல்லவா?

பதில்:-ஆம், நீங்கள் கூறியது யதார்த்தமான உண்மையாகும். ஆனால்

தற்போதைய ஆட்சியானது பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தரப்புக்களை ஒன்றிணைத்துள்ளதாக உள்ளது. இதில் சிங்கள தேசிய வாதத்தினை முன்னிறுத்தும் கடும் போக்காளர்களும் உள்ளார்கள். ஆகவே அரசாங்கம் அவர்களின் அழுத்தங்களையும், கடந்து செயற்பட வேண்டியுள்ளது. 

அதனைவிட அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, பொருளாதார மந்த நிலைமை என்று நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான போக்கிற்கு அப்பாற் சென்று அதாவது, சம்பிரதாய அரசியல் அணுகு முறைகளுக்கு அப்பால் புதியதொரு கொள்கை ரீதியான முன்னெடுப்பொன்றை செய்ய வேண்டியுள்ளது. அதன் மூலமாகவே அனைத்து விடயங்களையும் சுமூகமாக நகர்த்தி முன்னெடுக்க முடியும்.

கேள்வி:- தென்னிலங்கை தலைவர்களைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினையே முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் அல்லவா இருக்கின்றார்கள்?

பதில்:- இந்த மனோநிலை ஏற்படுவதற்கு தமிழ்த் தரப்பிலிருந்தான கடந்த கால பிரதிபலிப்பும் காரணமாக இருக்கின்றது. எவ்வாறாயினும், 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது என்பதை உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தில் உள்ள பல தரப்பட்ட தரப்புக்களே இந்தவிடயத்தில் தலைமைகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அதுமட்டுமன்றி பிரதமர் நரேந்திரமோடியும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வட மாகாண சபையின் ஆட்சியாளர்கள் கடமைகளை தவற விட்டிருக்கின்ற நிலையில் ஏனைய மாகாண ஆட்சியாளர்கள் அதன் ஊடாக நன்மைகளை பெற்றவர்களாக காணப்படுகின்றார்கள். ஆகவே வடக்கு, கிழக்கிலிருந்து 13ஆவது திருத்தினை ஒழிப்பதற்கு எதிராக வருகின்ற கோஷங்களை விடவும் தென்னிலங்கையின் கோஷங்களே அதிகமாக காணப்படுகின்றன.

இவற்றை விடவும் மாகாண சபைகளை மீண்டும் கூட்டாது அவற்றை கலைக்க முடியாது. அதுமட்டுமன்றி அரசாங்கம் கொள்கை அளவில் 13ஐ நீக்குவது தொடர்பிலான தீர்மானமொன்றை எடுக்கவும் இல்லை. ஆகவே 13ஆவது திருத்தமும் அதன் வழி உருவான மாகாண சபை முறைமைகளும் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கும். ஒருபோதும் அவை நீக்கப்படமாட்டாது. அதனைவிடவும் சாதாரண மக்கள் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைப்பதற்கும் இத்தகைய கட்டமைப்புக்கள் அவசியமாகின்றன.

கேள்வி:- சாதாரண மக்கள் ஜனநாயாகத்தின் மேல் நம்பிக்கை வைப்பது

தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் நீங்கள் 20ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நீதிமன்றத்தின் வெளிப்படுத்தல்கள்

பாராளுமன்றத்திற்கு வரவுள்ளன. அதேநேரம், அது தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகள் அரசாங்கத்திற்குள்ளேயே காணப்படுகின்றன. ஆகவே அனைவரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபற்றிய பரந்துபட்ட கலந்துரையாடல்கள் அரசாங்கத்திற்குள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாக கிடைத்த 'ஒரு வெளி&#39 பறிக்கப்பட்டு விடும் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக இருக்கின்றது.

ஆனால் 19ஆவது திருத்தச்சட்டம் குழப்பங்களுக்கும், தவறான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுயாதீன கட்டமைப்புக்களின் பொறுப்புக்களை வகிப்பதற்கு காரணமாகியது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.