லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு கட்டிடத்திற்குள் டீசல் தாங்கி வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந் நாட்டு உள்ளூர் ஊடகமொன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக லெபனான் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஜோர்ஜஸ் கெட்டானே தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டின் மேற்கு சுற்றுப்புற நகரமான தாரிக் ஜாதிதாவில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீப் பரவல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

லெபனானில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து வெடிப்புச் சம்பவங்களினால் மக்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி பெய்ரூட் துறைமுகத்தில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவானது.

சுமார் 3,000 டன் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

இந்த வெடிப்பில் தலைநகர் பெய்ரூட்டில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர், 6,500 பேர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை சேதமாகியமையும் குறிப்பிடத்தக்கது.