கொரானாவைத் தொடர்ந்து பலரும் வேலைவாய்ப்பை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் எங்கே மனநலம் பாதிக்கப் படுகின்றார்களோ? என்ற கேள்வியும் எழுகின்றது.

குறிப்பாக மேலை நாடுகளில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மத்தியில் தோன்றியுள்ள பல்வேறு கொடூரமான சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் இத்தகைய கேள்வியையும் எழுப்புகின்றது. 

அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 5 பேரை இலங்கைத் தமிழர் ஒருவர் படுபாதகமாக படுகொலை செய்திருந்தார்.

இச்சம்பவம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கத்தி, சுத்தியல் கொண்டு கொடூரமாக மனைவி தனது பிள்ளைகள், இரண்டு மரு மக்கள் எனப் பலரைக் கொன்றவர்  தமது நெருங்கிய உறவினர்களான மேலும் நான்கு பேரையும் காயப் படுத்தியிருந்தார்.

இந்தக்  கொடூர நபர் தனது இளம் மனைவி, 5 வயதுக்குழந்தை, 18 மாதக் குழந்தை மற்றும் மருமக்களை கொன்ற அதேவேளை, தனது 18 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் உணவகம் ஒன்றில் பணி புரிந்தவர் எனவும் போதை மற்றும் மதுப் பழக்கவழக்கங்கள் இல்லாதவர் என்றும் கூறப்படும் அதேவேளை, சம்பவ தினம் ஏன் இவ்வாறு மிருகத்தனமாக மாறினார் என்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறினார்கள்.

எந்தவித ஈவிரக்கமுமின்றி தனது மனைவி, குழந்தைகளை மிருகத்தனமாக குத்தியும் வெட்டியும் கொலை செய்த குறித்த நபரை தற்போது மனநலம் குன்றியோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர் .

இதேபோன்று மற்றொரு சம்பவம் லண்டனில்  இடம்பெற்றுள்ளது. மலேசிய தமிழரான குறித்த நபர் தனது அழகிய மனைவி, பிள்ளை ஆகியோரை படுகொலை செய்த நிலையில் தன்னையும் காயப் படுத்திக் கொண்டுள்ளார்.

 மலேசியாவைச் சேர்ந்த குறித்த குடும்பம் லண்டன் மேற்குப் பகுதியில் பிராண்ட் பேர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் கணவன் குகராஜ், மனைவி பூர்ணா, 3 வயது மகன் கைலாஷ் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டனர். 

இளம் மனைவியையும் மகனையும் படுகொலை செய்த பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் காயப்படுத்திய நிலையில் இரத்த வெள்ளத்தில் இவர் கிடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மனைவி பிள்ளைகளை எப்போது கொன்றார் என்று தெரியாது என்றும், இதேபோல கொரோனாவுக்கு பின்னரான முடக்கத்தின் போது அடிக்கடி இவர்கள் சண்டையிட்டுவந்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்த தமிழர்கள் தற்போது  கொரோனா காரணமாக வேலையின்மையால் விரக்தியுற்று வீட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 

இதில் எது உண்மை? ஏன் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றனர்? தங்கள் குழந்தைகளையே ஈவிரக்கமின்றிக் ஏன் கொல்கிறார்கள்? என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்