(நா.தனுஜா)

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பெற்றோர்கள் எவ்விதத்திலும் அச்சம்கொள்ளத்தேவையில்லை.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உரிய கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, பரீட்சை மத்தியநிலையங்களுக்கு வருகைதருமாறு சுகாதார அமைச்சின் கீழான தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் விசேட வைத்தியநிபுணர் தீபா கமகே கேட்டுக்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கான அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம்தரப்புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்திருந்தது. இவற்றை உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துவது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. எனினும் மாணவர்களின் சுகாதாரநலனுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து சேவையில் பரீட்சை மத்தியநிலையங்களுக்கு வருகைதரும் மாணவர்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதுகுறித்து பெற்றோர்கள் அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமாகும்.

அதேபோன்று பரீட்சை மத்தியநிலையங்களுக்குள் மாணவர்களை அனுமதிக்க முன்னரும் சுகாதார நடைமுறைகள் சரிவரப் பின்பற்றப்படும். ஆகவே மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பெற்றோர்கள் எவ்விதத்திலும் அச்சம்கொள்ளத்தேவையில்லை. கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், போக்குவரத்துசபை உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புக்களும் இணைந்து பாதுகாப்பான முறையில் பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. அவற்றின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்றார்.

அதேவேளை பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளிலிருந்து கொழும்பிற்கும் கெர்ழும்பிலிருந்து ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அவற்றின் விபரம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.--