பலத்தீன விடுதலை இயக்க நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் நாயகமும், பாலஸ்தீனத்தின் பிரதம மத்தியஸ்தரருமான சேக் எரிக்கட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

65 வயதான எரிக்கட் இந்த தகவலை அவரது டுவிட்டர் பதிவில் வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் மிக முக்கியமான பாலஸ்தீனிய தலைவர்களில் ஒருவராக எரிக்கட் கருதப்படுகிறார்.

முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டில் நுரையீரல் மாற்று ஆறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளார்.

இந் நிலையில் தற்போது இலகுவான கொரோனா வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியிருக்கும் அவர் மேற்குக் கரை நகரமான எரிகோவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

சேக் எரிக்கட் பல தசாப்தங்களாக பாலஸ்தீன அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார், பெரும்பாலும் வெளிநாட்டு தூதர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய உரையாசிரியராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.