இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன், நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதையின் நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குவதுடன், அப்படத்தின் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன். 

இவரது இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன், பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். 

இந்நிறுவனத்தின் சார்பில் அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் முதல் திரைப்படத்தின் தொடக்க விழா படப்பிடிப்புடன் இன்று நடைபெற்றது.

இன்னும் பெயரிடப்படாத க்ரைம் த்ரில்லர் ஜேனரில் உருவாகும் இந்த படத்தில் 'பலே வெள்ளையத் தேவா', 'பிருந்தாவனம்',' கருப்பன் ' ஆகிய படங்களில் நடித்த நடிகை தான்யா ரவிச்சந்திரன், கதையின் நாயகியாக நடிக்கிறார். 

இவருடன்  நடிகர்கள் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி ஆகியோர்களும் நடிக்கிறார்கள். 

இவர்களைத் தவிர்த்து சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகிய புதுமுகங்கள் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். 

கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, பிஜு டான்பாஸ்கோ  தொகுக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.