மன்னார் சௌத்பார் பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார் என்ற சந்தேகத்தில் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எமில் நகர் பகுதியை சேர்ந்த ரொமியன் பொல்டஸ் சொய்சா (வயது 38) என தெரிய வந்துள்ளது.

மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு சற்று தொலைவில் நேற்று வியாழக்கிழமை (8) அதிகாலை நபர் ஒருவர் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு  அடையாளம் காணாத நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) குறித்த நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தனிமையில் வசிக்கும் வீட்டில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய தடைய பொருட்களை மன்னார் தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

வழமை போன்று குறித்த நபரை காலை கடற்தொழிலுக்கு அழைப்பதற்கு சக தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்ற பொழுது வீட்டில் அவர் இல்லாத நிலையில் அவர் உறங்கும் இடத்தில் இரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரிவிக்கப்படதை தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் புகையிரதம் மீது வீசப்பட்டுள்ளாரா?  அல்லது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.