(எம்.மனோசித்ரா)

சீன தூதுக்குழுவுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது குறித்து எனக்கு தெரியாது. 

அதனை விமான நிலைய நிர்வாகக் குழுவினரே நிர்வகிக்கின்றனர் என்பதால் அவர்களிடமே உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

கேள்வி : சீனாவிலிருந்து உயர்மட்ட தூதுக்குழு வந்துள்ளது. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை. 

நாட்டில் இவ்வாறானதொரு நிலைவரம் காணப்படும்போது இதுபோன்ற செயற்பாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் : இதனை வெளியுறவுகள் அமைச்சிடமே கேட்க வேண்டும். நாம் நாடு என்ற ரீதியில் செயற்படும்போது ஒரே வகையில் செயற்பட்டால் எல்லா விடயங்களையும் செய்ய முடியாமல் போகும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. 

இவ்வாறான நிலைமைகளின் போது 15 ஆவது தினத்தில் தொற்று ஏற்படாதா? என்று சிலர் வினவுகின்றனர். 

அவ்வாறெனில் மேலும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரிக்க முடியுமா ? எனவே தான் அனைத்து வியடங்களில் இதனை பின்பற்ற முடியாமலுள்ளது என்றார்.