(எம்.மனோசித்ரா)

பொரளை - காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

குறித்த பெண் பிரிதொரு தொழிற்சாலையில் தொழில் புரிபவராவார். இந்த தொழிற்சாலை மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்புடையது என்பதால் அந்த கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளராகவே இவர் கருதப்படுகின்றார்.

இன்று காலை குறித்த பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்பட்டிருக்கவில்லை. எனினும் அவரது தொடர்புகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலமே அவர் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளராக கண்டறியப்பட்டார்.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள குறித்த கர்பிணிப் பெண் கம்பஹா - மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். இவர் இன்று முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அமையவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினமே இவர் பணி புரிந்த தொழிற்சாலையிலுள்ள ஏனைய நபர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலை, வெலிகந்த, இரணவில, மினுவாங்கொட, காத்தான்குடி, தெல்தெணிய, நெவில் பெர்னாண்டோ, முல்லேரியா, அம்பாந்தோட்டை, ரம்புக்கன மற்றும் கம்புறுகமுவ ஆகியன கொரோனா தொற்றுக்கு சிசிச்சையளிப்பதற்கான வைத்தியசாலைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.