(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே எம்.சி.சி உடன்படிக்கை நடைமுறையாகும் என்ற மோசமான சரத்தொன்று எம்.சி.சி  உடன்படிக்கையில் உள்ளது. இந்த விதிமுறையை மாற்றியமைத்து, பாராளுமன்றத்தில் சகலரதும் கருத்துக்களை பெற்றுக்கொண்டே எம்.சி.சி உடன்படிக்கை கைச்சாத்திடுவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் கூறுகின்றது.

பாராளுமன்றத்தில் இன்று சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஆளும் தரப்பு உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இந்த கருத்துக்களை கூறினார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,

"மிலேனியம் சலேஞ்ச கொப்ரேசன்" உடன்படிக்கையை செய்வதா இல்லையா என்பது குறித்து ஆராய அரசாங்கம் குழுவொன்று நியமித்து ஆராய்ந்து வருகின்றது.

முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த உடன்படிக்கைக்கு விரும்பவில்லை, ஆராய முயற்சிகள் எடுக்கப்பட்டது, ஆனால் காணி விடயத்தில் கண்டிப்பான தீர்மானங்கள் எமது தரப்பில் உருவாக வேண்டும்  என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேபோல் புதிய அரசாங்கம் இதில் தீர்மானம் எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்கு அமையவே இப்போது உடன்படிக்கை நிறுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.

சர்வதேச உடன்படிக்கைகளை நாம் நிராகரிக்கவில்லை. நாட்டிற்கு ஆரோக்கியமான உடன்படிக்கைகளை செய்ய வேண்டும். அது குறித்து உரிய நபர்களுடன் பேச வேண்டும். எம்.சி.சி உடன்படிக்கையிலும்  அதே முறைமையை கையாளவே நினைக்கிறோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.