(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தம் முடிவுக்கு வந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் சீனாவுக்கு சென்றது உண்மைதான். ஆனால், சீனாவில் இருந்துகொண்டு யுத்த நகர்வுகளை முன்னெடுத்து இயக்கினேன் என, சபையில் கூறிய முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால்தான்  யுத்தத்தை நிறைவுசெய்ய முடிந்தது.

ரணில்- மைத்திரி ஆட்சியில் இருந்திருந்தால் யுத்தம் முடிவுக்கு வந்திருக்காது எனவும் சபையில் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றிக்கொண்டு இருந்த வேளையில், "முன்னைய அரசாங்கம் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டது. 

எப்போதுமே ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சி சர்வதேச நிகழ்ச்சி நிரலை நம்பியே செயற்பட்டும் வந்தது. இது நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக நாசமாக்கியுள்ளது. 

எனினும், நாம் மாற்று பொருளாதார கொள்கையில் செயற்பட்டு வருகின்றோம்; உடன்படிக்கைகள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் பேசுகின்றனர்; நீங்கள் பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் அனைத்தும் எமக்கு நன்றாக தெரியும். 

நாங்கள் என்ன செய்தோம் என்பதும் அனைவருக்கும் தெரியும்; அவர்கள் இல்லாது போகுமளவுக்கு எமது உடன்படிக்கைகள் இருந்தது; முதல் பேச்சுவார்த்தை; இரண்டாது அவர்களே இல்லை;

இது தான் எமது கொள்கை; யுத்தம் என்று வந்தால் யுத்தம் செய்வதே எமது கொள்கை; எம்மை பற்றி தெரியாது நடந்துகொள்ள வேண்டாம்; நாம் எவ்வாறு யுத்தம் செய்தோம் என்பதை உங்களின் உறுப்பினர் சரத் பொன்சேகா நன்றாக கூறுவார். 

ஆனால், யுத்தம் முடிவுக்கு வரும் வேளையில் அவர் சீனாவில் இருந்தார்" என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, யுத்தம் முடிவுக்குவர இரண்டு வாரங்கள் இருக்கையில், கீழ்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மட்டுமே அவசியம் என்ற நிலைப்பாடு இருந்தது. 

இந்த காலத்தில் இராணுவத்திற்கு யுத்த தாங்கியொன்று தேவைப்பட்டது. நான்கைந்து தடவைகள் அதனை பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்தும் அதனை பெற்றுக்கொடுக்க முடியாது போய்விட்டது. 

இறுதியாக ஒரு தினம் குறிப்பிட்டு அந்த தினத்திற்குள் வராவிட்டால் குறித்த யுத்த தாங்கிகள் எமக்கு வழங்கப்படாது என கூறினார்கள். 

அதற்கான நான் அங்கு(சீனா) சென்றேன்; ஆனால் அங்கு சென்ற போதும் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இப்போதைய இராணுவ தளபதியாக இருப்பவரை தொடர்புகொண்டு பேசுவேன்;

என்ன செய்ய வேண்டும் என கூறுவேன்; நான் ஒழிந்து திரிந்தேன் என நினைக்க வேண்டாம் என்றார்.

அமைச்சர் மஹிந்தானந்த:- 

நீங்கள் யுத்தத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், தலைமைத்துவம் குறிந்து எமக்குள் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நீங்கள் யுத்தம் நடத்தும்போது எமது அரசாங்கம் இல்லாது போயிருந்தால் நீங்கள் யுத்தத்தை நடத்தியிருக்க முடியாது. 

விடுதலைப்புலிகள் உங்களுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியபோதும் கோத்தாபய, மஹிந்த ராஜபக்ஷ வினர்தான் உங்களுக்கான பாதுகாப்பை கொடுத்தனர். இதற்கு எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தது தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சரத் பொன்சேகா:- 

நான் இப்போதும் ஏற்றுக்கொள்கிறேன். ரணில் - மைத்திரி போன்றவர்கள் ஆட்சியில் இருந்தால் எம்மால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது. அதனை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்.

அமைச்சர் மஹிந்தானந்த:-

நீங்கள் இருக்கும் அணி தவறான அணி: நீங்கள் இந்தப்பக்கம் இருக்க வேண்டும்: அந்தப்பக்கம் இருக்கக்கூடாது என்றார்.