இறுதி யுத்தத்தின் போது போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி என கூறியதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும் அனைத்து தமிழ்த்தேசிய சக்திகளும் ஒன்றிணையவேண்டும் என தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனக்கூறியமை தொடர்பில் பதில் வழங்குவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது பேர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொண்டவர் பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா இது இவ்வாறு இருக்கும்போது போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் மூடிமறைக்கின்ற பகிரத பிரயத்தனத்தில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ராஜபக்ஷக்கள் எல்லோருமே இதனை மூடி மறைப்பதற்கு பல முரண்பட்ட விடையங்களைத்தான் கூறிவருகின்றார்கள்.

இவ்வாறிருக்கையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பிஸ்கட் கொடுத்து படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற கருத்துக்கு அன்றைய இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா தற்போது கூறியுள்ள கருத்துக்கள் தமிழ் மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. 

12 வயது நிரம்பாத சிறுவனைப் பார்த்து சிறுவர்களின் படைத்தளபதி என்று கூறியுள்ளார். சாதாரணமாகவே 18 வயதுக்குட்பட்டவர்களை சிறுவர்கள் என்று அழைப்பார்கள் அவ்வாறான நிலையில் 12 வயது நிரம்பாத சிறுவனை சிறுவர் படைத்தளபதி என்று ஒரு இராணுவத்தளபதியாக இருந்தவர்தான் உலகத்தின் பீல்ட் மார்ஷல்  ஆவார். 

காட்டுமிரண்டித்தனமான கோரமுகத்தைக் கொண்ட ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுத்தவர்கள் இவர்கள் மீது போர்க்குற்றங்கள் இன அழிப்புக்களை தீவிரப்படுத்தாது நல்லாட்சி என்று கூறியவர்கள் தொடர்ச்சியாக மூன்று ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை தவறாக வழிநடத்திய தமிழ்த்தலைவர்கள் என எமது மக்கள் விளங்கிக்கொண்டுள்ளனர்.

இன்றைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் இதனை எமது மக்கள் விளங்கிக்கொள்கிறார்கள். 12 வயது சிறுவனை சிறுவர் படையணியின் தளபதி என்றால் மூன்று வயது ஐந்து வயது கொண்ட சிறுவர்களையும் சிறுவர் படைகள் இருந்தது என்று கூறுவீர்களா? 

அது மட்டுமன்றி ஷெல்வீச்சின் போதும் விமான குண்டு வீச்சின் போதும் சிதறிக்கொல்லப்பட்ட கற்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளை தாயின் கருவறையில் இருந்த படைகள் என்று கூறுவீர்களா? இவ்வாறான கதைகளைக் கூறுபவர்களை குறிப்பாக சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு சரியான பாடம் வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. 

ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுவத்துவதற்கு தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்ற அத்தனை சக்திகளும் இப்போதே அணிதிரண்டு அந்தக் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்து அதன் ஊடாக பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்தவேண்டும்.

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாஸ சரத் பொன்சேக்காவை கட்டுப்படுத்த வேண்டும் அது மட்டுமன்றி அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்புக்கோர வேண்டும். ஒரு சிறுவனை பிஸ்கட் கொடுத்து கொலை செய்தது மட்டுமன்றி அந்த சிறுவனை சிறுவர் படையணியின் தளபதியாக கூறியது கொலையிலும் விட மோசமானது. 

படையில் இருந்தவர்களுடன் நீங்கள் போராடினீர்கள் அதைவிட வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுப்படுகொலை செய்ததும் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமன்றி அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்த முற்படுவது கொடுமையிலும் கொடுமை. சரத்பொன்சேக்கா போன்றவர்கள் தமிழ் பகுதிகளுக்கு வருவார்களானால் அவர்களுக்கு எதிராக போராடவேண்டும் மற்றவர்களுக்கு இது பாடமாக அமையும் என்றார்.