தச்சுத் தொழில் நிலையம் ஒன்று நேற்றிரவு (7) புதன்கிழமை 8.30 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகிலுள்ள முகம்மட் ஹனீபா முகம்மட் சமீம் என்பவருக்கு சொந்தமான தச்சுத் தொழில் நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த நிலையம் தீப்பற்றி எரிவதைக் கண்ட மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இத் தீ விபத்தில் அங்கிருந்த பெறுமதியான பல மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.

குறித்த நிலையத்தில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியாத நிலையில் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம் உடனடியாக வரவழைக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை  ஊழியர்கள் மற்றும் அங்கு ஒன்று திரண்ட பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.