போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவவூட் நடிகை ரியா சக்ரவர்த்தி நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்திய தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) முடிவு செய்துள்ளது.

10 நாட்களுக்கு தினமும் அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும், ஒரு இலட்சம் தண்ட பணம் செலுத்த வேண்டும்,நாட்டை விட்டு செல்லக்கூடாது, வேறு சாட்சிகளை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட 9 நிபந்தனைகள் ரியா சக்ரவர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்தவுடன் மும்பை பைகுல்லா சிறையில் இருந்து ரியா சக்ரவர்த்தி நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியவில் வெளியே வந்தார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி  போதைப்பொருள் விற்பனையாளர்களின் சங்கிலித்தொடரில் ரியா இருக்கவில்லை என்றும் வேறு ஆதாயத்துக்காகவோ பணத்துக்காகவோ போதைப்பொருளை வாங்கி வேறு யாருக்கும் அவர் வழங்கியதாக தெரிய வரவில்லை என்றும் செப்டம்பர் 7ஆம் திகதி (புதன்கிழமை) அவரை பிணையில் விடுதலை செய்யும் உத்தரவில் குறிப்பிட்டார்.

மேலும், அவருக்கு குற்றப்பின்னணி இல்லை என்றும் பிணையில் விடுவிக்கப்படும் காலத்தில் அவர் தவறு செய்வதற்கான வாய்ப்பில்லை என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்றும் நீதிபதி தெரிவித்தார்.

"பிரபலங்கள், மொடல்கள் ஆகியோருக்கு எதிரான வழக்கை மிகக் கடுமையாக நடத்தி தண்டிக்கப்பட்டால்தான் சமூகத்தில் இந்த விவகாரம் முன்னுதாரணமாகும்" என்று தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்து விட்டார்.

ரியாவுக்கு பிணை வழங்கிய நீதிபதி, அவரது சகோதரர் ஷோவிக்கின் பிணை மனுவை நிராகரித்தார். இதேவேளை, சுஷாந்த் சிங்கின் சமையல்காரர் திபேஷ் சாவந்த், உதவியாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட மொத்தம் 10 பேரை இந்திய தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இதுவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.