மன்னார் மாவட்டத்தில் சுகாதார திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இன்றைய தினம் (8) வியாழக்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் யுத்த காலத்திலும் சரி தற்போதைய 'கொரோனா' காலப் பகுதியிலும் சரி அர்பணிப்புடன் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றி தங்களை தற்போது வேறு திணைக்களங்களுக்கு நியமித்து இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

எனவே தங்களை தொடர்ந்து சுகாதார திணைக்களத்தினுள்ளே நியமனங்களை வழங்க கோரி சாரதிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வேறு எந்த மாகணங்களிலும் இல்லாத முறைமை தற்போது வட மாகாணத்தில் காணப்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக சம்மதப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடாக மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இது வரை எந்த விதமான பதில்களும் மாகாண பிரதம செயலாளரினால்  வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில் அப்பகுதிக்கு சென்ற மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கோரிக்கையை முன்வைத்ததுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.