கொரோனா எதிரொலி ! இந்தியாவிலிருந்து எவரும் வருகைதரவில்லை - பிரென்டிக்ஸ் நிறுவனம் விளக்கம்

By T. Saranya

08 Oct, 2020 | 01:41 PM
image

(நா.தனுஜா)

மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அண்மைக்காலத்தில் எவரும் வருகைதரவில்லை என்று தெரிவித்திருக்கும் பிரென்டிக்ஸ் நிறுவனம், இந்தியப்பிரஜை ஒருவரின் ஊடாகவே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்தையும் முற்றாக மறுத்திருக்கிறது.

கொவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாமல் இந்திய பிரஜையோ அல்லது இந்திய பிரஜைகள் குழுவொன்றோ மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைக்கு வருகைதந்தமையின் விளைவாகவே அங்கு பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று பரவலாகக் கூறப்படுகின்றது. எனினும் இதில் எவ்வித உண்மையும் இல்லை என்று நேற்று முன்தினம் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் பிரென்டிக்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மினுவாங்கொடையில் உள்ள எமது நிறுவனத்திற்குச் சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் கொவிட் - 19 வைரஸ் பரவலால் ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அதனை கையாள்வதில் நாம் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும் தற்போதைய நெருக்கடி நிலையின் மத்தியிலும் நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து விடயங்கள் குறித்தும் உடனடியாகத் தகவல்களை வெளிpயடும் அதேவேளை, பொதுமக்களால் எழுப்பப்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

எமது தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் சில சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தமையால் அதுகுறித்துத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். அண்மைக்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு எவரும் வருகைதரவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி மினுவாங்கொடைத் தொழிற்சாலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி மூலப்பொருள் பயன்படுத்தப்படுவதில்லை.

அதேபோன்று மீண்டும் நாடு திரும்பியுள்ள இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம். இந்தியாவில் பணிபுரியும் எமது இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக நாம் மூன்று விமானங்களை விசாகபட்டிணத்தில் சேவையில் ஈடுபடுத்தியிருந்தோம். அவ்வாறு நாடு திரும்பிய தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பி.சி.ஆர் பரிசோதனையை செய்தல், 14 நாட்கள் அரசாங்கத்தினால் தயார்செய்யப்பட்டுள்ள கட்டாய தனிமைப்படுத்தலில் இருத்தல், மேலும் 14 நாட்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புடன் சுயதனிமைப்படுத்தலில் இருத்தல் ஆகியவை உள்ளடங்கலாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருந்த அனைத்து சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளையும் உரியவாறு பின்பற்றினார்கள். அதற்கு மேலதிகமாக இவ்வாறு நாடு திரும்பியவர்கள் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வருகைதரவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மேலும் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் முதலாவதாக ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்ட பின்னரும் கூட, அங்கு பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களும் பணிக்கு வருவதற்கு நிர்பந்திக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் காணொளியொன்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அதுவும் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெளிவுபடுத்துவதோடு, தொற்றுக்குள்ளாகியுள்ள எமது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். அத்தோடு விரைந்து செயற்படுவதன் ஊடாக இந்த நெருக்கடி நிலையினால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right