(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன இதுவரை ஊடகப் பேச்சாளர் பதவியினையும் வகித்த நிலையிலேயே, குறித்த பதவிக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது, அவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இருவேறு ஊடக சந்திப்புக்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன முன்வைத்த கருத்துக்கள், சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கான காரணம் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.