(செ.தேன்மொழி)

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக வாக்களிக்கும் போது , ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அவர்களது மனச்சாட்சியின் படி தீர்மானித்து வாக்களிப்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை 20 திருத்த சட்டமூலத்தில் சர்வாதிகார செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் காணப்படுவதாகவும் , அதனால் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் மற்றும் கட்சிபேதங்களை பாராது  நாட்டு மக்களின் நலன்கருதி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு பேச்சுகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ 'சுபீட்சமான எதிர்காலம்' கொள்கைத்திட்டத்தில் , மக்களின் அபிலாசனைகளை நிறைவேற்றும் வகையில் புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாகவே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் எதற்காக அவசரமாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்.

இந்த சட்டமூலத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்புகளே காணப்படுகின்றன. அதில் காணப்படும் சிக்கலான சட்டமூலங்களை மீள்திருத்தம் செய்துள்ளதாக தெரிவித்தாலும் , எந்த சட்டமூலம் மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உறுதியான பதிலை அரசாங்கம் வழங்கவில்லை.

தற்போது மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் மிக்க ஒரு தருணத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நாம் எதிர்வரும் எமது தலைமுறையினருக்கு ஜனநாயக ஆட்சியையை ஒப்படைக்க போகின்றோமா ? சர்வாதிகார ஆட்சியை ஒப்படைக்க போகின்றோமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.