(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட  அவர் நிரபராதி என அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய சாட்சியங்கள் கிடைத்தால் தேவைப்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

இன்று காலையில் பாராளுமன்றம் கூடிய வேளையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது மற்றும் அவரது விடுதலை குறித்த விமர்சனங்கள், இந்த தாக்குதலை அடுத்து விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் கைது செய்யப்பட்ட அரச நிறுவனங்களையும், நியதிச் சட்ட நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் சமல் ராஜபக் ஷ இந்த விடயங்களை கூறினார். 

இந்த தாக்குதலின் பின்னர் அரச நிறுவனங்களையும், நியதிச் சட்ட நிறுவனங்களையும் சேர்ந்த 130 ஊழியர்கள் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டனர். 10 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து ஆழமாக பேச முடியாது. எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட, உதவிகளை செய்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.