(நா.தனுஜா)

அரச பாடசாலைகளில் இரண்டாம் நிலைக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் மேற்படி கடனுதவியின் ஊடாக அரச பாடசாலைகளில் இரண்டாம் நிலைக்கல்விக்கான பாடவிதானங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைமை என்பன மறுசீரமைக்கப்படவுள்ளன. 

அதேபோன்று இக்கடனுதவி மூலம் உரிய வசதிகளுடன் கூடிய முழுமையான இரண்டாம் நிலைக்கல்விப்பாடசாலை வலையமைப்பை பிரதேச செயலகமட்டத்தில் விருத்தி செய்வதுடன் அதன்மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான இரண்டாம் நிலைக்கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல், கல்வியியல் கல்லூரிகளை பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்த்துதல், ஆசிரியர் சமநிலையைப் பேணுதல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையைக்குத் தீர்வு காண்பதன் ஊடாக மாணவர்கள் தேர்ச்சி மட்டத்தை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன்நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.