(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஆராய்ந்தே 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பேன். 

இத்திருத்தத்தினால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனிக்கவில்லை. 

பிரதமரின் அதிகாரங்களை பெருவாரியாக குறைத்து நாட்டு மக்களுக்கு தேவையற்ற ஏற்பாடுகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன என, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள் அரச வரப்பிரசாதங்களுக்காக பண்டாரநாயக்கவினதும், சிறிமாவோ பண்டாரநாயக்கவினதும் கொள்கையினை விற்று பிழைக்கும் அடிமட்ட நிலைக்குதள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பல்துறைகளில் இன்று நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் தாக்கம், வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு, இதற்கிடையில் அரசியலமைப்பினை மையப்படுத்தி இல்லாத ஒரு பிரச்சினை. 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வதாக  பொதுஜன பெரமுன இடம் பெற்று முடிந்த இரண்டு பிரதான தேர்தல்களில் குறிப்பிடவில்லை.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட குறைப்பாடுகளை மாத்திரம் திருத்தம் செய்து 20 ஆவது அரசியமைப்பு திருத்தத்தை முரண்பாடற்ற விதத்தில் உருவாக்கியிருக்கலாம். 

ஆனால், அரசாங்கம்  ஒரு சில தரப்பினரது தவறான அபிப்பிராயங்களை கொண்டு 20 ஆவது திருத்தத்தை பெரும் பிரச்சினைக்குள்ளானதாக மாற்றிமைத்துள்ளது.

அரசியமைப்பு பேரவை அரசியல்மயமாக்கப்பட்டமை, ஜனாதிபதி அமைச்சு பதவி வகிக்க முடியாது என்ற ஏற்பாடு, அமைச்சர் தெரிவு, ஆணைக்குழு உறுப்பினர் தெரிவு, பதவி நீக்கம் ஆகியவற்றில் காணப்பட்ட சிக்கல் நிலை ஆகியவை அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரதான குறைப்பாடுகளாக காணப்பட்டன. இவ்விடயங்களை மாத்திரம் திருத்தம் செய்திருக்கலாம். 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் முழுமையாக எதிர்க்கவும் முடியாது. இத்திருத்தம் காரணமாகவே அவர் இன்று ஜனாதிபதியாகியுள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் எந் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை எவரும் பகிரங்கப்படுத்தவில்லை. பிரதமரின் அதிகாரங்கள் பெருவாரியாககுறைக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் இரட்டை குடியுரிமை பாராளுமன்றம் செல்ல வேண்டும் என இலங்கை பிரஜைகள் எவரும் கேட்கவில்லை. 

பஷில் ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான்கரை வருட காலத்தில் வீட்டுக்கு அனுப்பினார். 

தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை இரண்டரை வருடகாலத்தில் வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகிறார் என அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய மதகுருமார்கள் குற்றச்சாட்டும் அளவிற்கு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றின் அதிகாரங்கள் பல அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றில் அதிகாரங்கள் இரத்து செய்ய அனுமதி வழங்கும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது. 

மக்களின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்ற அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின், அதற்கு மக்களாணை அவசியம் என்பதை அரசாங்க தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை அரசாங்க தரப்பின் பொறுப்பு கூற வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. 

20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஆராய்ந்தே 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பேன். மக்களின் இறையான்மையினை மதித்து அரசியல் செய்வதால் மக்களின் பக்கமே செயற்படுவேன்.

சிறந்த அரசியல் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பண்டாரநாயக்க அவர்கள் ஸ்தாபித்தார். கட்சியின் கொள்கையை காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உலகறிய செய்தார். 

சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரச பதவிகள், வரப்பிரசாதங்கள் என்பவற்றுக்காக கட்சியின் பாரம்பரிய  கொள்கையை விற்றுப்பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை கவலைக்குரியது என்றார்.