(செ.தேன்மொழி)
தனிநபர் ஒருவர் கையில் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கப் பெற்றால் அது சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்புக்கே வழிவகுக்கும் என்று  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆனந்த லெனரோல் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தனி நபர் ஒருவர் கையில் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கப் பெற்றாலே நாட்டின் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று பலர் கூறிவருகின்றனர். இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நாடுகளே அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. தனிநபர் கையில் அதிகாரங்கள் கிடைக்கப் பெற்ற நாடுகள் சர்வாதிகார செயற்பாடுகளினால் பெரிதும் பாதிப்புகளையே எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையும் சர்வாதிகார ஆட்சியின் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டி ஏற்படும். கடந்த அரசாங்கம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தது மட்டுமன்றி , நாட்டுக்கு பயன்தரக் கூடிய பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தும் , அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை.

அதனால் மக்கள் கடந்த அரசாங்கத்தின் பயன்தரும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் பெற்றிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு இதுவரையில் நாட்டுக்கும் , மக்களுக்கும் பயன்தரக் கூடிய ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதா?

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை தயாரித்தவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தபோது , ஜனாதிபதி தானே அதனை தயாரித்ததாக அறிவித்திருந்தார். இந்த திருத்த சட்டமூலத்தை அவரே தயாரித்திருந்தால் அது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களே இன்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 20 ஆவது திருத்த சட்டமூலத்திலே சில அரச நிறுவனங்களின் கணக்காய்வு செயற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு சட்டம் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவின் அரசியலமைப்பு திருத்தத்தில் கூட உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை. இது முற்றுமுழுதாக சர்வாதிகார போக்கிற்கான முன்னெடுப்பாகும்.