(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் தற்போது சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். இதேவேளை , நாட்டு மக்களை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஒரே மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மறை பெருமானத்தை பெற்றிருந்தது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கும் முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாகும். அரசாங்கத்தின் முறையற்ற வரிக்குறைப்பின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் வைரஸ் பரவலின் பின்னர் இந்த நிலைமை மேலும் அதிகரித்தது. தற்போது நாட்டு மக்கள் இருவேளை உணவுகளை பெற்றுக் கொள்ளவே முடியாமல் இருக்கின்றனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் , வைரஸ் பரவல் காரணமாக பலரது தொழில்வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இந்நிலையில் தற்போது அத்தியவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதற்கமைய போதிய வருமானமின்றி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வார்கள்? அரசி மற்றும் தேங்காயின் விலைகள் ஒருகாலத்தில் அதிகரித்தாலும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் அதனை முறையாக கையாண்டிருந்தன. ஆனால் ,தற்போதைய அரசாங்கத்திற்கு அதனை கையாள தெரியவில்லை என அவர் இதன்பொது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.