ஒரணிக்குத் திரட்டிய திலீபன்

Published By: Digital Desk 3

06 Oct, 2020 | 02:23 PM
image

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அடுத்து,  வடக்கில் இரண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது போராட்டம் தியாகி திலீபன் சாவைத் தழுவிய செப்டம்பர் 26 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்றது.

இரண்டாவது போராட்டம்,  வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியில் முழுஅடைப்பு போராட்டமாக இடம்பெற்றது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் 26ஆம் திகதி நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து,   சாவகச்சேரிக்கு அது இரகசியமாக மாற்றப்பட்டது.

போராட்டம் ஆரம்பிக்கப்படும் வரை, அது எங்கு நடக்கப் போகிறது என்று தெரியாத நிலையே  பொலிசாருக்கும் இருந்தது. பொதுமக்களுக்கும் இருந்தது.

அதனால்தான், ஆரம்பத்தில் 30 பேருடன் தொடங்கிய போராட்டம்,  200க்கும் மேற்பட்டோருடன் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது போராட்டம், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வடக்கு முழுமையாகவும்,  கிழக்கில் பெரும் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்தின் மூலம்,  தமிழ் மக்கள்  ஏகோபித்த ரீதியாக ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.

பொதுத்தேர்தலில் தங்கள் தரப்பில் உள்ளவர்களும் ஆசனங்களை பெற்றிருக்கின்றனர், அவர்களும்  தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தான்,  இனி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர முடியாது, என்று கூறிக் கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்குத் தான், அந்தச் செய்தி உறைப்பாக கூறப்பட்டிருக்கிறது.

உணர்வு ரீதியான,  உரிமை ரீதியான விடயங்கள் என்று  வரும் போதும், தாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை அவர்கள் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில்,  கோட்டாபய ராஜபக்ஷவை நிராகரித்த தமிழ் மக்கள்,  இப்போது அவரது அரசாங்கத்தின் முடிவையும் நிராகரித்திருக்கிறார்கள். அதனை கண்டித்திருக்கிறார்கள்.

இது ஒன்றும்,  பலவந்தமாகவோ,  மிரட்டல்கள் மூலமாகவோ முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இல்லை.

இதற்கென பிரச்சாரங்கள் என்று எதுவும் முன்னெடுக்கப்படவும் இல்லை. ஊடகங்கள் மூலமாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுத்தான், ஒன்றுபட்டு தமிழ் மக்கள் தமது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த முறை திலீபன் நினைவேந்தலுக்கு அரசாங்கம் தடை விதிப்பதன் மூலம் சாதகமான நிலையை பெற்றது எனக் கூறமுடியாது.

இந்தத் தடைகளால்,  இரண்டு வாரங்களும் திலீபன்  குறித்த பேச்சுக்களுடனேயே கடந்து போகச் செய்திருக்கிறது.

33 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனை அறியாத ஒரு தலைமுறை இப்போது உருவாகி விட்டது.

இளவயதில் உள்ள அவர்களுக்கு திலீபன் பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத் தான் இருந்தன.

ஆனால் அரசாங்கத்தின் தடை,  திலீபனின் உண்ணாநோன்பை பற்றி,  தியாகத்தை பற்றி,  அவரது குணஇயல்புகளை பற்றி, அவரது ஆற்றலைப் பற்றி,  பரவலாக பேசும் நிலையை உருவாக்கி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சர்வதேச ஊடகங்களிலும் இந்த விவகாரம் இடம்பிடிக்க தவறவில்லை.

சிங்கள மக்கள் மத்தியில் கூட, திலீபன் யார் என்ற தேடலை தொடக்கி விட்டிருக்கிறது,

திலீபன் குறித்த நேர்மறையான விமர்சனங்கள் மாத்திரமன்றி,  எதிர்மறையான விமர்சனங்களும் சிங்கள தமிழ் அரசியல் தரப்புகளால் முன் வைக்கப்பட்ட நிலையில்,   திலீபன் தொடர்பாக அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டனர்.

இவையெல்லாம் சாத்தியமானது அரசாங்கம் விதித்த தடைகளால் தான்.

இந்த தடைகள் விதிக்கப்பட்டிருக்காது போனால், திலீபன் நினைவேந்தல், நல்லூரில் உண்ணாவிரதம், தீபம் ஏற்றலுடன் மாத்திரம் கடந்து போயிருக்கும்.

நீதிமன்றத் தடைகளால் தீபம் ஏற்றுதல் போன்ற வழக்கமான  நினைவேந்தல்கள்  நடக்காது போனாலும்,  உணர்வு ரீதியாக திலீபனை நினைவு கூரக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டது.

அரசாங்கம் அழுத்தங்களை கொடுக்கும் போது, தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை தானாக வருமென்று சி.வி. விக்னேஸ்வரன் சில வாரங்களுக்கு முன்னர் தான் கூறியிருந்தார்.

திலீபன் நினைவேந்தல் மறுப்பு தமிழ் கட்சிகளை  ஓரணியாக நின்று போராடும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இது அரசியல் ரீதியான கூட்டாக உருவாவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லாத போதும், ஏழை மக்களின் பிரச்சினைகள், உரிமைகள் சார்ந்த விடயங்களில், ஒன்றுபட்டு செயற்படுகின்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் நழுவிக் கொண்டிருந்த தமிழ் தலைவர்களை,  ஒரே வரிசையில் உட்கார்ந்து பேச வைத்திருக்கிறது.

இந்த நிலையை ஏற்படுத்தியது அரசாங்கமா - அல்லது திலீபனின் ஆன்மாவா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற திலீபனின் மிகப் பிரபலமான கூற்று உண்மையாகுமா என்பது ஒரு புறத்தில் இருக்க, இவ்வாறான நிலைமைகளுக்கு எதிராக  குரல் கொடுக்கக் கூடிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

போருக்குப் பிந்திய 11 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.  சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. 

இப்போது, நினைவேந்தும் உரிமையும் கூட அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பறிப்பு அரசாங்கத்தின் விவேகமற்ற செயல் என்பதே உண்மை.

ஏனென்றால், இவ்வாறான தடைகள் தான் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும். வேகத்தை கூட்டும்.

தமிழ் மக்களை உணர்வு ரீதியாக அரவணைக்க விரும்புகின்ற ஒரு அரசாங்கம், இதுபோன்றதொரு மோசமான முடிவை - தீர்க்கதரிசனமற்ற ஒரு முடிவை ஒருபோதும் எடுத்திருக்காது.

தமிழ் மக்களை அடக்கியாள முனையும், தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்க முனையும், அவர்களை அடிமைப்படுத்த எத்தனிக்கும் ஒரு அரசாங்கம் தான் இவ்வாறான முடிவை எடுக்கும்.

அந்த வகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் - இலக்கு என்ன என்பதை தமிழ் மக்களுக்கு நன்றாக உணர்த்தியிருக்கிறது இந்த நினைவேந்தல் தடை.

இதன் மூலம், தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லக் கூடிய ஒரு அரசாங்கம் அல்ல என்ற செய்தி தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

அதேவேளை, இவ்வாறான தடைகளால் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

உணர்வு பூர்வமான இந்த விவகாரத்தை அரசாங்கம் மிக நுட்பமான முறையில் கையாளத் தவறியிருக்கிறது.

தொடர்ந்தும் இதேபோக்கில் தான் செயற்பட அரசாங்கம் முனையுமானால், அடுத்த தலைமுறையினரும் கூட அரசாங்கத்துடன் மல்லுக்கட்டுபவர்களாகவே இருப்பார்கள்.

அரசாங்கம் இந்த விடயத்தை கடும் போக்குடன் அணுக முனைந்துள்ளதன் மூலம் தமிழ்க் கட்சிகளை குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களிலாவது ஒன்றிணைய வைத்திருக்கிறது.

இந்த ஒன்றிணைவு இயல்பானது என்று கூடியாது, காலமும் சூழலும் நிர்ப்பந்தங்களும் அவர்களை இந்த முடிவுக்கு இழுத்து வந்திருக்கின்றன.

இவ்வாறு பலமான சக்தியாக நிற்கும் போது தமிழ் மக்கள் எந்தளவுக்கு பக்க பலமாக நிற்பார்கள் என்பது தமிழ் மக்களால் உணர வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு செயற்படுவது தான், தமிழ்க் கட்சிகள் திலீபனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

கபில்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04