திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(6) உத்தரவிட்டார்.

பூட்டிகுளம், ஸ்ரீ பக்மிகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பத்தொன்பது வயதுடைய மகனொருவன் ஸ்ரீ பக்மிகம பகுதியிலுள்ள பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2020 யூலை மாதம் 21 ஆம் திகதி சந்தேக நபரின் மகன் சிறுமியை வேறு பகுதிக்குச் அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் தனது பதினைந்து வயதுடைய மகளை சந்தேக நபரின் மகன் அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தனது மகள் இருக்கும் இடம் சந்தேக நபருக்கு தெரியும் எனவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த தந்தையை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.