யாரை இலக்கு வைக்கிறது இந்தியா?

Published By: Digital Desk 3

06 Oct, 2020 | 11:40 AM
image

உள்நாட்டு அரசியலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  பலமிழந்து வருகின்ற ஒரு சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு மெய்நிகர் மாநாடு ஒன்றை அவருடன் நடத்தியிருக்கிறார்.

 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதி தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள தருணத்தில்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரங்கள் முழுவதையும் ஜனாதிபதியிடம் இழந்து போயிருக்கின்ற இந்தத் தருணத்தில்,  இந்தியப் பிரதமரின் இருதரப்பு மாநாடு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை இந்தியா பெரிதும் விரும்பவில்லை. கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக போவதை இந்தியா முன்னரே அறிந்திருந்தது.

ஆனால் அதை தடுக்க இந்தியா முயற்சிக்கவில்லை. 

2015 ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் அவப்பழியை  ஏற்படுத்தி இருந்தது அதற்கு ஒரு காரணம்.  

அந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக இந்தியா எதிர்பார்த்த நலன்களை அடைய முடியவில்லை என்பது இன்னொரு காரணம்.

ஆட்சி மாற்றம் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்று என்பதை உணர்ந்து விட்ட பின்னர், அதில் தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள இந்தியா விரும்பவில்லை.

ஆனால் கோத்தாபாய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வருவதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவில்லை. 

ஆயினும், அவர் பதவிக்கு வந்தவுடன்- மிக குறுகிய நாட்களுக்குள் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளக் கூடிய சூழல் இருந்தது.

அதனைத்தான் இந்தியா தமக்கு சாதகமானதாக கருதியது.  

தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற கூடியவராக கோத்தாபய ராஜபக்ஷ இருப்பார்- அவ்வாறு இருந்தால் அவரை அனுசரித்துச் செல்வது தவறில்லை என்று அதிகாரிகள் நம்புகின்ற அளவுக்கு நிலைமைகள் காணப்பட்டன.

ஆனால் கிட்டத்தட்ட கடந்த 10 மாதங்களுக்கு மேலான கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சி இந்தியாவுக்கு பாதகமானது என்று கூறமுடியாவிட்டாலும், அதனை நீண்டகால நோக்கில் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கமாக இருக்கும் என்று இந்தியாவினால் நம்ப முடியாதிருக்கிறது.

2015இற்கு முன்னரே, கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியாவின் அதிகாரவர்க்கத்துக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்பட்டிருக்கவில்லை.

சீன நீர்மூழ்கிகள் கொழும்புக்கு வந்தமை குறித்து, கோத்தாபய ராஜபக்ஷ திரும்பத் திரும்ப அளித்த உறுதிமொழிகளை புதுடெல்லி ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவரது வாக்குறுதிகளை நம்பவில்லை.

இவர்கள் இருவருக்கும் இடையில் சுமுகமான உறவு அப்போது இருக்கவும் இல்லை.

அதைவிட இலங்கை பாதுகாப்பு ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வதையும்,  இந்தியா அதிக அளவில் விரும்பவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர் பாகிஸ்தானின் போர் விமானங்களை வாங்க முயன்ற போது, இந்தியாவே அதற்கு தடைபோட்டது. 

அதற்குப் பின்னர், இதுவரையில் இலங்கை விமானப்படைக்கு போர் விமானங்கள் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடயத்தில் இந்தியா ஒரு வரையறையை வைத்திருக்கவே விரும்புகிறது.

ஏனென்றால், சிங்களத் தேசியவாத தலைவராகவே அவர் செயற்படுகிறார். 

தேசியவாத சிந்தனை கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசாங்கத்துடன்,  செயற்படுவது நீண்டகால நோக்கில் ஆபத்தானது.

இப்போது கூட பகிரங்கமாக இந்தியாவை எதிர்க்கும், இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிடும் அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் தான் பதவியில் இருக்கிறது.

இவ்வாறான நிலை இந்தியாவைப் பொறுத்தவரை நீண்டகால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பலமடைவது இந்திய நலன்களுக்கே ஆபத்தாக அமையும் என்ற அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறானவர் அல்ல. அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். 

உள்நாட்டில், வெளிநாட்டில் அரசியலை கையாளுவதில்  இராஜதந்திர அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடியவர்.

எனவே தான், இந்தியப் பிரதமர் மோடி, இருதரப்பு மாநாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்திருக்கிறார்.

இது ஒரு வகையில், கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் இழந்து, ஒரு அலங்கார தலைவராக மாறிக் கொண்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பலப்படுத்துகின்ற- அவருக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற- அதனை உணரச் செய்கின்ற ஒரு நகர்வாகவும் கூட இருக்கலாம்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றுபட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தாலும், பிரதமரின் அதிகாரங்களை இந்த திருத்தச் சட்டம் பறிக்காது என்று அவர் கூறியிருந்தாலும், அது எந்தளவுக்கு உண்மை என்பது கேள்விக்குரியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக பலமானவராக இருந்தாலும், அதிகார ரீதியாக அவர் வலுவிழந்து வருகிறார்.

இவ்வாறான ஒரு நிலையில், இந்தியா தனக்கு யார் அதிகம் பயனைக் கொடுக்கக் கூடியவர், யாரை வைத்து காரியம் சாதிக்கலாம் என்று தான் முடிவுகளை எடுக்கும்.

அவ்வாறானவர்களைப் பலப்படுத்துவதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் இந்தியா மாத்திரமன்றி எந்தவொரு நாடுமே தீர்மானங்களை எடுக்கும்.

இப்போதைய நிலையில் இந்தியா எடுத்துள்ள நகர்வுகள், இலங்கை அரசாங்கத்துக்குள் இருக்கக் கூடிய அல்லது உருவாகக் கூடிய பிளவுகளை சாதகமாக்கிக் கொள்வதற்கான ஒரு நகர்வு என்றும் கூறலாம்.

பிராந்திய ரீதியாக தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு, இலங்கையில் வலுவான ஒரு அரசாங்கம் இருப்பதையே இந்தியா வரவேற்கும். 

அவ்வாறான ஒரு அரசாங்கம் தன்னுடன் இணங்கிச் செயற்படாத ஒன்றாக இருப்பதையும் இந்தியா விரும்பாது.

இவ்வாறான பின்புலக் காரணிகளில் இருந்து நோக்கினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையே அதிகம் கையாளக் கூடிய தலைவராக இந்தியா தெரிவு செய்திருக்கும்.

இலங்கையில் இப்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலையில் பலமானதாக இல்லை.

எனவே, சஜித் அணியினரையோ ரணில் அணியினரையோ பலப்படுத்தும் வேலைகளில் இறங்க முடியாது.

இருக்கின்ற தெரிவுகளில் எது மிகச் சிறந்ததோ அதனை கையாளுவதே சரியானது என்ற முடிவுக்குத் தான் இந்தியா வந்திருக்கிறது.

இந்தியாவின் இந்த முடிவு, இலங்கையின் ஆட்சியாளர்களை வலுப்படுத்தும் என்று கூறமுடியாது, இது உள்ளக புகைச்சல்களை அதிகரிக்கச் செய்யும், அரசுக்குள் புதிய பிரச்சினைகளையும் அணிகளையும் உருவாக்கும்.

இந்தியா இதனை விரும்பித் தான் செய்கிறதா அல்லது தவிர்க்க முடியாத கட்டத்தில் இந்த முடிவை எடுக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால், இந்தியாவின் இப்போதைய அணுகுமுறைகளை வைத்துப் பார்க்கின்ற போது, அது கோத்தாபய ராஜபக்ஷ தரப்புக்கு சாதகமானதாக இல்லை என்பதே உண்மை.

சீனாவின் தலையீடுகளுக்கு எதிராக இந்தியாவும், ஜப்பானும், இணைந்து செயற்படும் சூழலில்,  கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும்,  ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை ரத்து செய்ததும் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பு தான்.

இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும் போது இந்தியா ஏன் மஹிந்த ராஜபக்ஷவை முன்னுரிமைக்கு கொண்டு வர விரும்புகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

 

 ஹரிகரன்

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13