அறிமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தயாராகி வரும் 'அன்புள்ள கில்லி' என்ற படத்தில் நடித்திருக்கும் செல்ல பிராணி ஒன்றிற்கு பிரபல கொமடி நடிகரும், 'சிக்ஸ் பேக்' சிங்கமுமான நடிகர் சூரி பின்னணி பேசியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'அன்புள்ள கில்லி'. 

இப்படத்தில் மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, இளவரசு,  மயில்சாமி,  பூ ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் தளபதி விஜயின் ரசிக பிராணியாக நடித்திருக்கிறது. அத்துடன் நாய் பேசுவது போல் பல வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது. 

இதன் காரணமாக, இதற்கு திரையுலக பிரபலங்கள் பின்னணி பேசினால் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் எண்ணினர்.

இது தொடர்பாக இயக்குனர் பேசுகையில்,

'கதையில் முக்கிய திருப்பங்களில் நாய் நடித்திருப்பதால் அதற்கு முன்னணி நடிகர் யாரேனும் பின்னணி பேசினால் நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டோம். 

அதன் பிறகு நடிகர் சூரியை அணுகி, விடயத்தை விபரித்த பின்னர் அவர் ஒப்புக்கொண்டார் . அவருடைய பாணியில் பேசியதுடன் சில இடங்களில் பொருத்தமான வசனங்களையும் அவரே பேசியது சிறப்பாக அமைந்தது. 

இந்தப் படம் ஹொலிவூட்டில் வெளியாகும் ' த லயன் கிங் ' போல் வித்தியாசமாகவும், அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய செய்யக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது' என்றார்.