நாட்டின் சில பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருவிட்ட

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - இரத்தினபுரி வீதி, மலவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரொருவர்  உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி வீதியில் புரண்டு அதே திசையில் வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரலங்வில

அரலங்வில, பஹல - எல்லேவௌ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஹல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அரலங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பஹல - எல்லேவௌ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீட்டியாகொட

மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு வீதி, சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வலப்பக்கமாக திரும்ப முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த லொறியின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து சென்ற நபர் காயம் காரணமாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மில்ல - ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேகாலை

கேகாலை - கொழும்பு வீதி, கரடுபன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கர வண்டியின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் பின்னாலிருந்து சென்ற நபரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

கேகாலையை  சேர்ந்த 18 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.