13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 19 ஆவது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய, டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இந்த தொடரில் இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளது.

எனவே நான்காவது வெற்றியை பதிவுசெய்வதற்கு இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதும் என்பது ஐயம் இல்லை.

பெங்களூா் அணியைப் பொருத்த வரை, துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறாா். அவருடன் களம் காணும் பிஞ்சும் ஓட்டங்களை குவித்து வருகிறார்.

டிவில்லியா்ஸ், சிவம் டூப் ஆகியோரின் துடுப்பாட்டமும் அணிக்கு பலம் சேர்ப்பது மாத்திரமன்றி அணி தலைவர் விராட் கோலியும் கடந்த போட்டியுடன் ரன் வேட்டையை ஆரம்பித்துள்ளார்.

இசறு உதானா, நவ்தீப் சைனி  ஆகியோரின் வேகப் பந்து வீச்சும் வோஷிங்டன் சுந்தா் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சும் அணிக்கு கேடயமாக அமைந்துள்ளது.

டெல்லி அணியைப் பொருத்த வரை, பிருத்வி ஷா நிலையான துடுப்பாட்டம் மூலம் சிறப்பாக பங்களிப்பு செய்ய, அனுபவமிக்க வீரரான ஷிகா் தவன் அதிரடியை ஆரம்பிக்காதது அணிக்கு சற்று கவலை அளிப்பதாக உள்ளது. 

எனினும் ரிஷாத் பந்த் ஸ்ரேயஸ் அய்யரும் துடுப்பாட்டத்தில் அணிக்கு வலுச் சேர்க்கின்றார்கள். மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரன் ஹெட்மேயர் ஆகியோரும் அணிக்கு பக்கபலமாக உள்ளனா். 

ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, ஹா்ஷல் படேல் வேகப்பந்துவீச்சாலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டாய்னிஸ் ஆகியோா் சுழற்பந்துவீச்சாலும் எதிரணியை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஐ.பி.எல். அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. அதில் பெங்களூரு அணி 15 போட்டிகளில், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலயைில், ஒரு போட்டியின் முடிவு எட்டப்படவில்லை.