கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணமொன்றில் ஆளுநரின் காவலரணை குறித்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிழக்கு லக்மன் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தார்லமில் நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

லக்மன் மாகாண ஆளுநர் ரஹ்மத்துல்லா யர்மலின் நிலை உடனடியாகத் தெரியவில்லை. எனினும் குண்டுவெடிப்பில் அவர் சற்று காயமடைந்ததாக அந் நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.. 

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன், குண்டுவெடிப்பில் யர்மலின் மெய்க்காப்பாளர்கள் 4 பேர் உயிரிழந்தாகவும், காயமடைந்தவர்களில் 28 பொதுமக்களும் இரண்டு காவலர்களும் அடங்குவதாகவும் கூறினார்.

தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுக்கள் நடமாடும் இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்க்கவில்லை.

ஆப்கானிஸ்தானிலும் அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் குறைந்தது 1,282 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 2,176 பேர் காயமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.