அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்து என்ன நேரும் என்பது தொடர்பில் பல கேள்விகள் கிளம்பியிருக்கின்றன.

அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக  மருத்துவ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒக்டோபர்  முதலாம் திகதியிலிருந்து 10 நாட்களுக்கு அவர் சுய தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு  திட்டமிடப்பட்டிருக்கும் ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் அவரால் பங்கேற்ககூடியதாக இருக்கலாம்.புளோரிடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பேரணி கைவிடப்பட்டது.

இந்த காலகட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் பேரணிகள் இரத்துச்செய்யப்படவேண்டும் அல்லது பிற்போடப்படவேண்டும்.

எத்தகைய சூழ்நிலைகளில் தேர்தல் பிற்போடப்படமுடியும்?

ஜனாதிபதியின் சுய தனிமைப்படுத்தல் காலகட்டம் நிச்சயமாக  பிரசாரங்களைப் பொறுத்தவரை, அவரின் ஆற்றல்களை பாதிக்கும். அதனால் தேர்தலை பிற்போடமுடியுமா என்றும் எவ்வாறு அது நடைபெறலாம் என்றும் கேள்விகள் எழுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரமே நடைபெறுகி்ன்றன. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை  ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அந்த செவ்வாய்க்கிழமை இவ்வருடம் எதிர்வரும் மூன்றாம் திகதி வருகிறது.

தேர்தல் திகதியை மாற்றுவதென்பது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்யவேண்டியதாகும். அதில் ஜனாதிபதிக்கு எந்த பங்கும் இல்லை.

தேர்தல் திகதியில் செய்யப்படக்கூடிய எந்த மாற்றத்தையும்  அமெரிக்க காங்கிரஸின் இரு சபைகளினதும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரிக்கவேண்டும். ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் ஜனப்பிரதிநிதிச் சபை இருப்பதால்  இது சாத்தியமில்லை.

அவ்வாறு  மாற்றங்களைச் செய்வதாக  இருந்தால்கூட, ஒரு ஜனாதிபதியின் நிர்வாகம் நான்கு வருட காலத்துக்கே நீடிக்கிறது என்று அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது.அதனால் ட்ரம்பின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 நண்பகலுடன் காலாவதியாகிறது.

இந்த திததியை மாற்றுவதாகயிருந்தால்  அரசியலமைப்புக்குத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரால் அல்லது மாநிலங்களின் சட்டச்சபைகளினால் (அமெரிக்க மாநில சட்டச்சபைகளில் மூன்றில் இரண்டு  பங்கினால்) அது  அங்கீகரிக்கப்படவேண்டும். இதுவும் சாத்தியமில்லை.

ஜனாதிபதி ட்ரம்ப் செயற்படமுடியாதவராக முடங்கிப்போனால் என்ன நடக்கும்? 

ஜனாதிபதி தனது கடமைகளைச் செய்யமுடியாத அளவுக்கு சுகவீனமுற்றால் செய்யவேண்டியவை குறித்து அரசியலமைப்பு பின்வருமாறு கூறுகிறது; 

உப ஜனாதிபதியிடம் அதிகாரத்தை கையளிப்பதற்கு ஜனாதிபதியை அரசியலமைப்பி்ன் 25 ஆவது திருத்தம் அனுமதிக்கிறது. இதன் அர்த்தம் உப ஜனாதிபதி மைக் பெனஸ் பதில் ஜனாதிபதியாக வருவார் என்பதேயாகும். குணமடைந்த பிறகு ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்தை கையேற்கமுடியும்.

ஜனாதிபதி அதிகாரத்தை உப ஜனாதிபதியிடம் கையளிக்கமுடியாத அவக்கு கடுமையாக சுகவீனமுற்றால், அவரால் பதவியில் தொடரமுடியாது என்று அமைச்சரவையும் உப ஜனாதிபதியும் பிரகடனம் செய்யமுடியும். பிறகு பென்ஸ் ஜனாதிபதியின் பொறுப்புக்களை கையேற்கலாம்.

பென்ஸும் கூட செயற்டமுடியாதவராக கடுமையாக சகவீனமுற்றால், பதவிப்படிநிலை சட்டத்தின் பிரகாரம் ஜனப்பிரதி நிதிகள் சபையின் சபாநாயகர் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்கலாம்.

இப்போது சபாநாயகராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி இருப்பதால் அத்தகைய பதவிமாற்றம் சட்டப்போராட்டங்களுக்கு வழிவகுக்கலாம் என்று அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நான்சி பெலோசி அவ்வாறு பதவியேற்க தயாரில்லை என்றால், அல்லது பதவியேற்க இயலாமல் இருந்தால், அது  குடியரசு கட்சியின் மிகவும் சிரேஷ்ட செனட்டருக்கே கையளிக்கப்படும். தற்போது  அந்த கட்சியின் சிரேஷ்ட செனட்டராக 87 வயதான சார்ள்ஸ் ஈ. கிராஸ்லி இருக்கிறார். 

அவ்வாறு அவர் பதவியை பொறுப்பேற்றாலும்கூட சட்டரீதியான சவால்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.

முன்னர் எந்த ஜனாதிபதியாவது கடமைகளைச்  செய்யமுடியாதவாறு சுகவீனமடைந்திருந்தாரா?

1985 ஆம் ஆண்டில் றொனால்ட் றேகன்  புற்றுநோய்ச்  சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் தனது பொறுப்புக்களை உப ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷிடம் ஒப்படைத்தார்.

அதே போன்று 2002 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வழமையான மருத்துவ பரிசோதனைக்காக மயக்கமருந்து கொடுக்கப்பட்டபோது தனது உப ஜனாதிபதியிடம் பொறுப்பைக் கையளித்தார்.

ஒரு கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டவர் ஏதாவது காரணத்துக்காக தனது பணிப்பொறுப்பை நிறைவேற்ற இயலாமல் போகுமேயானால், அடுத்து முன்னெடுக்கப்படவேண்டியவை குறித்து தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

மைக் பென்ஸ் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்பதாக இருந்தாலும்கூட அவர் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரப்போவதில்லை.

ஏனென்றால், குடியரசு கட்சி ஏற்கனவே அதன் வேட்பாளராக ட்ரம்பை உத்தியோகபூர்வமாக நியமித்துவிட்டது.

கட்சியின் விதிகளின்படி 168 பேர் கொண்ட குடியரசு தேசிய கமிட்டி புதிய ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க வாக்கெடுப்பை நடத்தும். மைக் பென்ஸும் வேட்பாளராக தெரிவாவதற்கான சாத்தியங்கள் இருக்கலாம்.

ஜனநாயக கட்சியினரோ அல்லது குடியரசு கட்சியினரோ தங்களது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்தபிறகு அவரை வேறு ஒருவரால் இதுவரையில் பதிலீடு செய்ததாக இல்லை.

முன்கூட்டியே வாக்குப்பதிவை நடத்துவது பற்றி? 

இது பெருமளவு நிச்சயமற்ற தன்மைகளை தோற்றுவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால், இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது கட்சிகளினால் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களுடன் ஏற்கனவே தபால் மூலம் தங்களது வாக்குகளை அனுப்பிவிட்டார்கள். சில மாநிலங்களில் நேரடி வாக்குப்பதிவும் தொடங்கிவிட்டது.

கடுமையாக சுகவீனமுற்று இயங்கமுடியாமல் போயிருக்கக்கூடிய வேட்பாளரின் பெயர்  வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றிருக்கும் நிலையிலும்கூட வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலிபோர்னியாவின் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் றிக் ஹசென் எழுதியிருக்கிறார்.

ஆனால், பதிலீட்டு வேட்பாளருக்கு  அமெரிக்க தேர்தல் மன்றத்தில் (US electoral college-- called presidential electors ) வாக்களிப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு மாநில சட்டங்கள் அனுமதிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழும்.

ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்தும் வாக்குச்சீட்டில் இருப்பார் என்பது பெரும்பாலும் நிச்சயம் என்று தேர்தல் விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சட்டப் பேராசிரியரான றிச்சர்ட்  பில்டெஸ் கூறுகிறார்.

கோட்பாட்டு அடிப்படையில் நோக்குகையில் வேட்பாளரின் பெயரை மாற்றுவதற்கு குடியரசு கட்சி நீதிமன்றத்தின் உத்தரவை நாடமடியும்.  ஆனால், நடைமுறையில் அதற்கு போதுமான கால அவகாசம் இருக்கப்போவதில்லை. (பி.பி.சி.)