வட்டுக்கோட்டை வடக்கு, சித்தன்கேணியில் வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் பட்டபகலில் வீடு புகுந்து 10 பவுண் நகைகள் மற்றும் 9 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வீட்டில் உள்ளவர்கள்  கோயிலுக்கு வேனில் சென்றுள்ளனர். முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் குடும்பத்தலைவர் வீட்டில் இருப்பார் என்ற அடிப்படையில் வீட்டுக் கதவின் திறப்பை முன்னுக்குள்ள சுவாமித்தட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் கடைசி நேரத்தில் அவரும் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

கோயிலிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவி திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் தங்க நகைகளும் 9 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.