2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னராக அமைக்கப்பட்ட நெடுங்கேணி பேரூந்து நிலையம் அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளது.

பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் போக்குவரத்து வசதிகளும், தங்குமிட வசதிகளும், 15க்கு மேற்பட்ட கடைத் தொகுதிகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடம் அமைத்த காலத்தில் கடைத்தொகுதிகளை போட்டி போட்டு வியாபாரிகள் எடுத்தனர். ஆனால், கடைகளை எடுத்து நடத்தியவர்களும் தற்போது கடைகளை மூடியுள்ளனர். கடைகளை ஒழுங்காக திறந்து நடத்திய வரலாறே இல்லை என வியாபாரிகள் கவலையோடு தெரிவித்து வருகின்றனர்.

பேரூந்து நிலையத்தில் உள்ள ஏனைய கடைகளை நடத்துவதற்கு யாரும் முன்வருவது கிடையாது. அவ்வாறு எடுத்து நடத்தாமல் இருப்பதற்கான  காரணமாக இருப்பது பேரூந்துகள் வந்து செல்லாமை, போதியளவு மக்களின் பயன்பாடு இல்லை. 

இவ்வாறு இருக்கும் இப்பேரூந்து நிலையம் அதிகார பூர்வமாகத்தான் திறந்து வைக்கப்பட்டதா? அப்படியாக தெரியவில்லை. இ.போ.ச பேரூந்துகளோ, தனியார் பேரூந்துகளோ தற்போது  உள் வராத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பேரூந்து நிலையம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் சரி, ஏனைய அபிவிருத்தி சம்பந்தமான கூட்டங்களிலும் சரி கதைக்கப்படுகின்றதே தவிர அதற்குரிய செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரியவில்லை.

மத்திய பேரூந்து நிலையத்தை மையப்படுத்தி பொதுச்சந்தையும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாய பிரதேசமான வவுனியாவில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலகு தன்மை கருதி அமைக்கப்பட்டதாகும்.

எனவே அரச, தனியார் பேரூந்துகள் நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்திற்குள் வந்து தரித்து செல்வதற்கும் இப்பேரூந்து நிலையத்தினை  நடத்தி செல்வதற்கும்  உரிய அதிகாரிகள் ஆவண செய்து தருமாறு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கேட்டு நிற்கின்றனர்.

இவ்வாறாக பல மில்லியன் பணங்களை செலவு செய்து கட்டப்படும் பேரூந்து நிலையங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இதே போல் வவுனியா பேரூந்து நிலையம் உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டும் பல்வேறு குறைபாடுகளை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.