(ஆர்.ராம்)

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாளை திங்கட்கிழமை கறுப்புக் கொடி எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை ஆதரவு வெளியிட்டுள்ளன. 

நாளையதினம் முழுவதும் அனைத்து பொதுமக்களும் கறுப்புக்கொடிகளை கட்டி 20ஆவது திருத்திற்கான எதிர்ப்புக்களை வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்ப்பில் ஈடுபட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் முன்னெடுக்கவுள்ளன.  அத்துடன் நாட்டின் முக்கிய இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கறுப்புக்கொடிகளை காண்பித்து எதிர்ப்புக்களை வெளியிடவுள்ளனர். 

இதேவேளை, நாளை மாலை நான்குமணியளவில் கொழும்பு புகையிரத நிலையத்தில் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுர நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியதோடு ஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காக செயற்படும் அனைத்து தரப்பினரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்குமாறு கோரினார். 

அத்துடன் பொதுமக்கள் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக தெரிவிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.