பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தெமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்  வெவ்வேறு வகையான துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 255, 9 மில்லிமீற்றர் அளவிலான துப்பாக்கி ரவைகள் 4 மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கி ரவைகள் 3 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி ரவைகளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் மற்றும்  அவருக்கு உதவி புரிந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 34, 38, 28 மற்றும் 44 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.