உலகில் கொரோனா வைரஸ் காரணமாக அன்றாடம் பெரும் எண்ணிக்கையானோர் மரணித்து வரும் நிலையில், இலங்கையில் விபத்துக்கள் மற்றும் எலிக் காய்ச்சல் போன்றவற்றால் பெருமளவானோர் மரணிக்கின்றனர்.

இவ் வருடத்தில் மாத்திரம் இதுவரையில் நாடளாவிய ரீதியில் 6,096 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் .

இவ்வாறு உயிரிழப்போர் அதிக அளவில் வயல் வேலை செய்பவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அந்த வகையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 1,341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சிய 4,755 பேரும் அனுராதபுரம் பொலநறுவை களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் தொடர்பில் பலருக்கு பூரண அறிவில்லாத நிலைமையே காணப்படுகின்றது.

இந்த எலி காய்ச்சலானது எலிகளால் அல்லது சில விலங்குகளின் சிறுநீரால் பரவும் ஒரு நோயாகும். இந்நோய் மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றுவதில்லை எனவும் பக்டீரியா எனும் நுண்ணுயிர் கிருமியால் உருவாகுவதாகவும் டொக்டர்கள் கூறுகின்றனர். 

இக் கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீராலேயே இந்த பக்டீரியா வெளி சூழலுக்கு வந்து செல்கின்றது.  இவ்வாறு வெளியேறிய பக்றீரியா வயல்களில் தேங்கிக் கிடக்கும் நீரில் தங்கிவிடுகின்றது. 

பின்னர் ஒருவரின் உடலில் இருக்கும் காயங்கள் மற்றும் தோலில் உள்ள சிராய்ப்புகள், புண்கள், தோல் உராய்வுகள் ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது.  

மேலும் வயல்களுக்கு அண்மையில் நீர் தேங்கியுள்ள குளம் குட்டைகளில் குளிக்கும் போது நீர் நிலைகளில் காணப்படும் பக்டீரியா அவர்களது கண்களில் உள்ள மென்சவ்வு ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் பக்டீரியா நிறைந்துள்ள நீரை மக்கள் அருந்தும் போதும் இதேபோன்று வயல் நிலங்களில் இறங்கி வேலை செய்யும் போதும் இந்நோய் பரவ வழி வகுக்கின்றது.  

ஒருவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்படுமிடத்து காய்ச்சல்,  உடம்பு  உளைச்சல், நோ, தலைவலி, உடல் களைப்பு, கண் சிவத்தல், கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் அல்லது சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்லுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இதனை அலட்சியம் செய்யுமிடத்து சிறுநீரகங்கள், இதயம், மூளை, ஈரல் என்பவை பாதிப்படைவதுடன் தீவிரமடையும்போது மரணம் சம்பவிக்கலாம் எனவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.  

எலிக்காய்ச்சல் பக்டீரியாவால் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

அதேவேளை, வயல் நிலங்களில் எலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

வயல் நிலங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இது சாத்தியமாகும். விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.  அன்றேல் கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க எலிக்காய்ச்சலால் அதிக எண்ணிக்கையானோர் மரணிக்க  நேரும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்.