ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் தேவ்தூத் பாடிக்கலின் வலுவான இணைப்பாட்டத்தினால் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது போட்டி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே இன்று பிற்பகல் சார்ஜாவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது.

155 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க பின்ஞ் 2.3 ஓவரில் எட்டு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக படிக்கல் மற்றும் விராட் கோலி களமிறங்கி வலுவான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி 10 ஓவர்கள் நிறைவில் 77 ஓட்டங்களையும், 15 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களையும் குவித்தது.

இந் நிலையில் 16 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் ஆச்சரின் பந்துப் பரிமாற்றத்தில் படிக்கல் மொத்தமாக 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டத்துடுன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

தொடர்ந்து களமிறங்கிய டிவில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்து விராட் கோலி அதிரடிக் காட்ட பெங்களூரு அணி ஓவரில் 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் விராட் கோலி 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களுடனும், டிவில்லியர்ஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் விராட் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். அரங்கில் 5,500 ஓட்டங்களை கடந்தமையும் விசேட அம்சமாகும்.

இதேவேளை ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டி தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகவுள்ளது.

சார்ஜாவில் ஆரம்பமாகியுள்ள இப் ‍போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.